தமிழகத்தை சேர்ந்த 25 வயது இளம் ஆல்ரவுண்டான வாஷிங்டன் சுந்தர் கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 54 டி20 போட்டிகள், 23 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அண்மையில் இந்திய அணியின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் இனி அவரது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் முதன்மை ஆல்ரவுண்டராக தொடர்ந்து இடம் பிடிப்பார் என்றும் கூறப்பட்டது.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பாராட்டிய : ரவி சாஸ்திரி
அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தர் அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடரில் பங்கேற்று விளையாடி இருக்கிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத அவர் கடந்த இரண்டு போட்டிகளாக இடம்பெற்று மிகச் சிறப்பான செயல்பாட்டையும் வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் எதிர்வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை பாராட்டி முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ரவி சாஸ்திரி அளித்த அந்த பேட்டியில் கூறியதாவது :
நான் வாஷிங்டன் சுந்தரை பார்த்த முதல் நாளே அவர்தான் அடுத்த மிகச்சிறந்த ஜெனியூன் ஆல்ரவுண்டர் என்றும், இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடப்போகும் வீரர் என்றும் கூறிவிட்டேன். ஏனெனில் அந்த அளவிற்கு அவரது திறமை என்னை கவர்ந்தது. பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்படும் அவர் பேட்டிங்கிலும் கணிசமாக கை கொடுக்கக் கூடியவர். அதனால் அப்போதே அவர் மிகப்பெரிய ஆல்ரவுண்டராக வருவார் என்று கணித்தேன்.
தற்போது அவருக்கு 25 வயது தான் ஆகிறது. இன்னும் பல டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் அப்படி விளையாடும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக மாறுவார் என ரவி சாஸ்திரி பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியது போன்று பந்துவீச்சில் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாஷிங்டன் சுந்தர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வந்தால் மேலும் ரன்களை குவிப்பார் என்று ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : 210 ஸ்ட்ரைக் ரேட்.. 88 ரன்ஸ்.. மிரட்டல் கேட்ச்.. இந்தியாவை சூப்பர்மேனாக வீழ்த்திய ஏபிடி.. வயதானாலும் மாறாத ஸ்டைல்
ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய அணிக்கு மிகவும் பின் வரிசையில் தான் வாஷிங்டன் சுந்தருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால் அவரால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. ஆனால் ரஞ்சி போட்டிகளை பொருத்தவரை தமிழக அணியின் துவக்க வீரராக கூட வாஷிங்டன் சுந்தர் விளையாடியுள்ளதால் அவருடைய அந்த அனுபவத்தை இந்திய அணி டாப் ஆர்டரில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



