10.2 ஓவரில்.. 0.9 டிகிரியை காணோம்.. இந்தியாவின் போக்கை உடைத்த பந்து.. அம்பயரிடம் மல்லுக்கட்டிய கில்

Shubman Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஜூலை 10ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் நாளில் 251/4 ரன்களை அடித்து நிதானமாக விளையாடி வந்தது.

இன்று தொடர்ச்சியாக நடைபெற்ற ஆட்டத்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸை கிளீன் போல்ட்டாக்கிய ஜஸ்ப்ரித் பும்ரா மறுபுறம் சதத்தை அடித்து சவாலை கொடுத்த ஜோ ரூட்டையும் போல்ட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அதற்கடுத்ததாக வந்த கிறிஸ் ஓக்ஸை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதனால் இங்கிலாந்தை விரைவாக இந்தியா 350 ரன்களுக்குள் சுருட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

போக்கை உடைத்த பந்து:

ஆனால் அப்போது பந்தை சோதித்த நடுவர்கள் அதனுடைய வடிவம் மாறியதைக் கண்டறிந்தனர். குறிப்பாக சோதனை வளையத்திற்குள் பந்து உள்ளே சென்று வர மறுத்ததால் விதிமுறைப்படி நடுவர்கள் வேறு பந்தை வழங்கினர். இருப்பினும் அதை இந்திய கேப்டன் சுப்மன் கில் வாங்காமல் நடுவருடன் கடுமையான வாக்குவாதம் செய்தார்.

ஏனெனில் முதல் நாளின் மாலை நேரத்தில் 80.2வது ஓவரின் முடிவில் அந்த பந்து புதிதாக மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து மேற்கொண்டு வெறும் 10.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அந்த ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியது. அந்த பந்து சராசரியாக 2.2 டிகிரி அளவுக்கு ஸ்விங் ஆகி இந்திய அணிக்கு நல்ல உதவியும் செய்து வந்தது.

- Advertisement -

0.9 டிகிரி காணல:

அப்படிப்பட்ட பந்தை ஏன் மாற்றினீர்கள்? என்று அம்பயரிடம் கேப்டன் சுப்மன் கில் மல்லுக்கட்டினார். ஏற்கனவே இங்கிலாந்தில் பயன்படுத்தப்படும் டுக் பந்துகள் வேகமாக வடிவத்தையும் மென்மையையும் இழந்து விடுவதாக இரு அணிகளும் விமர்சனம் செய்து வருகின்றன. அந்த சூழ்நிலையில் இந்த குறிப்பிட்ட பந்து வெறும் 10.2 ஓவரில் வடிவத்தை இழந்ததால் கேப்டன் சுப்மன் கில் நடுவரிடம் புகார் செய்தார்.

ஆனால் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத நடுவர் பழைய பந்தை தரவில்லை. அதனால் புதிதாக வழங்கப்பட்ட பந்தில் தொடர்ந்து இந்திய அணி பவுலிங் செய்தது. அந்த பந்து முன்பு போல இந்திய அணிக்கு எந்த உதவியும் செய்யவில்லை. சொல்லப்போனால் மாற்றப்பட்ட புதிய பந்து சராசரியாக 1.3 டிகிரி மட்டுமே ஸ்விங் ஆனது.

இதையும் படிங்க: 450 விக்கெட்ஸ்.. ஆஸியின் கமின்ஸை முந்திய ஜஸ்ப்ரித் பும்ரா.. ஜோ ரூட்டை அவுட்டாக்குவதில் உலக சாதனை

அந்த வகையில் புதிதாக மாற்றப்பட்ட பந்தால் 0.9 டிகிரி ஸ்விங் காணாமல் போனது என்றே சொல்லலாம். அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து இரண்டாவது நாள் உணவு இடைவேளையில் 353/7 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜேமி ஸ்மித் 51*, பிரைடன் கார்ஸ் 33* ரன்கள் எடுத்துள்ளார்கள்.

Advertisement