கடந்த பல ஆண்டுகளாகவே மூன்று வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா திகழ்ந்து வருகிறார். அவரது சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்து வருவதால் தொடர்ந்து அவர் விளையாட வேண்டும் என்று ரசிகர்களும் விருப்பப்படுகிறார்கள். ஆனால் பணிச்சுமை காரணமாக அவ்வப்போது பும்ராவுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் பும்ரா இடம்பிடித்து விளையாடி வருகிறார்.
பும்ராவை சரியாக கையாள வேண்டும் : ஏ.பி.டி
மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவரால் முழுவதுமாக விளையாட முடியாது என்றும் மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா பங்கேற்பார் என்று ஏற்கனவே நிர்வாகம் அறிவித்துவிட்டது. ஆனால் இந்திய அணி தற்போது இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ள வேளையில் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் மருத்துவரின் அறிவுரைப்படி அவரால் நிச்சயம் இந்த அனைத்து போட்டியிலும் விளையாட முடியாது என்று தெரிகிறது. இந்நிலையில் தெனனாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் பும்ராவை எவ்வாறு கையாள வேண்டும்? என்பது குறித்த தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பவுலர் என்றால் அது பும்ரா தான். அனைத்து வகையான போட்டியிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது. எனவே அவரை ஒரு போட்டியில் விளையாட வைக்க முடியாது என்று சொல்வது கடினம். என்னுடைய கருத்தின் படி டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா தொடர்ச்சியாக ஆட வேண்டும். ஏனெனில் கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் தான் எனவே முக்கியமான இந்த இங்கிலாந்து தொடரில் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடியிருக்க வேண்டும்.
எங்களது அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த டேல் ஸ்டெயினுக்கும் இதேபோன்று பணிச்சுமை காரணமாக அதிகளவு போட்டியில் விளையாடியதால் காயம் ஏற்பட்டது. ஆனாலும் நாங்கள் அவரை சரியாக கையாண்டோம். குறிப்பாக பெரிய முக்கியத்துவம் இல்லாத டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு முக்கிய டெஸ்ட் தொடர்களான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு எதிராக அவரை விளையாட வைத்தோம்.
அப்படி அவருடைய பணிச்சுமையை சரியாக கையாண்டு நாங்கள் விளையாட வைத்தது போல பும்ராவிற்கும் சிறிய தொடர்களில் ஓய்வு கொடுத்து முக்கியமான பெரிய தொடர்களில் விளையாட வைத்தால் அவரால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என ஏ.பி.டி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : சுப்மன் கில்லிடம் நியாயத்தை காட்டுங்க.. ஒருத்தரை நம்பியிருக்கும் இந்தியாவுக்கு அவர் வந்தாகனும்.. அசாருதீன் கவலை
மேலும் தற்போது இங்கிலாந்து தொடரில் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் என்று நிர்வாகம் அறிவித்துள்ளதையும் நாம் மறுக்க முடியாது. ஏனெனில் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்வரும் காலத்தில் முக்கிய தொடர்களில் அவரை சரியாக கையாள வேண்டும் என்றும் ஏபிடி கூறியது குறிப்பிடத்தக்கது.



