இங்கிலாந்து – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா 471 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 4 ரன்னில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். ஆனால் இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் டக்கெட் 62 ரன்களை அடித்து அசத்தினார். அவரை காலி செய்த பும்ரா அடுத்து வந்த ஜோ ரூட்டையும் 28 ரன்னில் பெவிலியன் அனுப்பி வைத்தார். ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஓலி போப் சதத்தை அடித்து 106 ரன்கள் விளாசினார்.
இந்தியாவின் சொதப்பல்:
மிடில் ஆர்டரில் ஹரி ப்ரூக் நங்கூரமாக விளையாடி சவாலை கொடுத்த நிலையில் எதிர்ப்புறம் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னில் சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த இளம் வீரர் ஜேமி ஸ்மித் சிறப்பாக விளையாடிய 40 ரன்கள் எடுத்த போது ஜடேஜா – சுதர்சன் பிடித்த நல்ல கேட்ச்சில் பெவிலியன் திரும்பினார். இந்தப் பக்கம் தொடர்ச்சியாக அசத்திய ஹாரி ப்ரூக் 85 ரன்னில் கொடுத்த அல்வா கேட்ச்சை ஜெய்ஸ்வால் தவற விட்டார்.
அதைப் பயன்படுத்திய ஹரி ப்ரூக் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அதன் வாயிலாக லீட்ஸ் மைதானத்தில் 31 வருடங்களுக்குப் பின் 99 ரன்களில் அவுட்டான வீரர் என்ற பரிதாப சாதனையை ஹரி ப்ரூக் படைத்துள்ளார். இதற்கு முன் 1994ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மைக்கேல் ஆதர்டன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 99இல் விக்கெட்டை இழந்தார்.
பரிதாப சாதனை:
இது போக 24 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிராக 99 ரன்னில் அவுட்டான 2வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பரிதாப சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2001 மொகாலி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் 99 ரன்னில் முதல் பேட்ஸ்மேனாக அவுட்டானார். அந்த வகையில் இந்தியா கொடுத்த அதிர்ஷ்டத்தை தவற விட்ட அவருக்கு பின் வந்த பிரைடன் கார்ஸ் தம்முடைய பங்கிற்கு 22 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: அந்த 2 ரெக்கார்டில் ஆண்டர்சன்.. சச்சினை நெருங்க கூட முடியாது.. கோப்பை பெயரை மாத்துங்க.. கவாஸ்கர் சாடல்
அதே போல கிறிஸ் ஓக்ஸ் இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து 38 ரன்னில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்தை 465 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 6 ரன்கள் முன்னிலையாகப் பெற்றது. இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா 5, சிராஜ் 2, பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.



