இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதற்கு முன்பாக அங்கு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அந்தத் தொடரின் முதல் போட்டி ட்ராவில் முடிந்த போதிலும் கருண் நாயர் இரட்டை சதத்தை அடித்து கம்பேக் கொடுத்தார். அதே போல சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் (2 முறை), ஜெய்ஸ்வால் ஆகியோரும் அரை சதத்தை அடித்து அசத்தினார்கள். அந்த சூழ்நிலையில் 2வது போட்டி நிஜூன் ஆறாம் தேதி நார்த்தம்டன் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கியது.
ராகுல் அசத்தல்:
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய இந்தியா ஏ அணிக்கு ஜெய்ஸ்வால் 17 ரன்னில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் அவருடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் நங்கூரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்களில் கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் நடையைக் கட்டினார். அடுத்ததாக வந்த கருண் நாயர் மறுபுறம் அசத்திய கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். கர்நாடகாவைச் சேர்ந்த அந்த ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரித்தான கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி அவசரம் இல்லாமல் பொறுமையாக ரன்களை சேர்த்தது.
க்ளாசிக் ராகுல்:
அந்த வகையில் மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் கருண் நாயர் 40 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து இங்கிலாந்து லயன்ஸ் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட ராகுல் அரை சதத்தை அடித்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடிய ரன்களை குவித்தார்.
இதையும் படிங்க: இந்த சேன்ஸை மட்டும் குடுத்தா சாய் சுதர்சன் அசத்துவார்.. ஆதரவு தெரிவித்த – மைக்கல் கிளார்க்
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய ராகுல் 14 பவுண்டரி 1 சிக்ஸருடன் சதத்தை அடித்தார். அதனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறேன் என்பதை அவர் காண்பித்துள்ளார். அதே போல துருவ் ஜுரேல் மீண்டும் அரை சதத்தை அடித்து 52 ரன்னில் அவுட்டானார். அடுத்த சில ஓவரில் ராகுலும் 116 (168) ரன்களில் அவுட்டானதால் இப்பதிவிடும் போது இந்தியா ஏ அணி 252/5 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.



