இந்திய கிரிக்கெட் அணியின் இரு தூண்களாக கருதப்படும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளனர். அதில் 2007ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான ரோஹித் சர்மா ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாற்றமாக பேட்டிங் செய்தார். அவரது திறமையை கவனித்து வந்த தோனி 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்தார்.
அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்த ரோஹித் சர்மா இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி நாளைடைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்தார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே விளையாடி வந்த அவர் 2019 உலகக் கோப்பையில் மட்டும் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்தார். அதனால் 2019இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
2019இல் ஓப்பனிங்:
அந்த வாய்ப்பில் பட்டாசாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார். குறிப்பாக 2021 லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்த அவர் தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிருபித்தார். இதற்கிடையே 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அவர் இந்தியாவின் கேப்டனாக முன்னேறி கடந்த 2 ஐசிசி கோப்பைகளை வென்ற சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் 2013இல் ரோஹித் சர்மாவை துவக்க வீரராக தோனி அறிமுகப்படுத்தியது போல 2019ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தாம் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாட வைத்ததாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “4, 5வது இடத்தில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா மிகவும் அலுப்பை சந்தித்தார்”
ஹனிமூன் போன்ற வாய்ப்பு:
“அப்போது தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் இவரால் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த முடியாது? என்ற நான் யோசித்தேன். வேகப்பந்து வீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்வதற்கான ஷாட்டுகள் அவரிடம் இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்கு உள்ளே நிற்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது ரோஹித் சர்மாவுக்கு ஹனிமூன் போல இருக்கும்”
“4, 5வது இடங்களில் 20, 30 ரன்களை மட்டுமே எடுத்த அவரை மேலே அனுப்பி அழுத்தத்க்குள் தள்ளுவோம் என்று நினைத்தேன். எனவே 2019 உலகக்கோப்பை முடிந்த பின் உங்களைத் துவக்க வீரராக விளையாட வைக்கப் போகிறோம் என்று அவரிடம் சொன்னேன். ஏனெனில் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அவர் நல்ல ஃபார்மை கொண்டிருந்தார்”
இதையும் படிங்க: தோனிக்கு தான் உண்மையான ரசிகர்கள் இருக்காங்க.. மத்தவங்க பணத்துக்காக அங்க இருப்பாங்க.. ஹர்பஜன்
“துவக்க வீரராக விளையாடிய முதல் போட்டியிலேயே அவர் சதத்தை அடித்தார். அப்போதிலிருந்து ஓப்பனிங்கில் மகிழ்ச்சியுடன் விளையாடிய அவர் இங்கிலாந்தில் அசத்துவதற்காக தன்னுடைய டெக்னிக்கில் நிறைய வேலைகளைச் செய்தார்” எனக் கூறினார்.



