இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் 2019 உலகக் கோப்பையை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இங்கிலாந்தில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடிய இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. அதைத்தொடர்ந்து மான்செஸ்டரில் நடைபெற்ற அரை இறுதியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 239 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது.
இருப்பினும் நியூசிலாந்து தங்களுடைய ஆட்டத்தை முடிக்கும் நேரத்தில் மழை வந்ததால் போட்டி ரிசர்வ் நாளுக்கு சென்றது. அன்றைய நாளில் 240 ரன்களை சேசிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித், ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் ஆரம்பத்திலேயே விழுந்த இந்திய அணிக்கு தோனி நங்கூரமாக விளையாடினார்.
வேதனை தோல்வி:
அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய ஜடேஜா முக்கிய நேரத்தில் விக்கெட்டை இழந்தார். கடைசியில் தோனியும் ஃபினிஷிங் செய்யாமல் ரன் அவுட்டானது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்து இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது. அதுவே தோனி கடைசியாக இந்தியாவுக்காக விளையாடிய போட்டியாகும். அந்தத் தோல்வியால் ரோஹித் சர்மா அடித்த உலக சாதனை 5 சதங்கள் வீணானது. விராட் கோலி கேப்டனாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பைத் தவற விட்டார்.
இந்நிலையில் அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் போது மழை வந்து வெற்றியை பறித்து சென்றதாக விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார். தமது வாழ்நாளில் மறக்க முடியாத அந்த தோல்வியைப் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் நினைவுக்கு கூர்ந்தது பின்வருமாறு. “2019 தோல்வி மிகப்பெரியது. உண்மையில் அது தான் ஒரு செமி ஃபைனல் அடுத்த நாள் வரை சென்ற தருணமாகும்”
வேதனையான நினைவுகள்:
“அது நாங்கள் மான்செஸ்டர் நகரிலிருந்து ஃபைனல் நாள் மைதானத்திற்கு செல்ல வேண்டிய நாள். அன்றைய நாள் காலையில் எழுந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற திகைப்பு இருந்தது. பல்துலக்க வேண்டுமா? காஃபி குடிக்க வேண்டுமா? அடுத்த கட்டம் என்ன? என்ற விஷயங்கள் தெளிவாக தெரியாமல் இருந்தது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது”
இதையும் படிங்க: தோனி இல்லை.. அவர்கிட்ட தான் எல்லா கஷ்ட நஷ்டங்களை ஷேர் பண்ணிக்குவேன்.. தனது நண்பன் பற்றி கோலி
“நாங்கள் மதிய நேரத்தில் விளையாடத் தயாராக இருந்தோம். ஆனால் அப்போது மழை வந்தது. அடுத்த நாள் காலையில் கால சூழ்நிலைகள் முற்றிலும் மாறியிருந்தது. அதை நான் எப்படி இதெல்லாம் மாறியது என்ற வகையில் பார்த்தேன். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது போன்ற தோல்விகளை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம். ஆனால் அந்த வேதனையான சமயங்களிலும் அதை நீங்கள் ஏற்றுக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும்” எனக் கூறினார்.



