இந்திய கிரிக்கெட் அணி எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை 2008 முதல் நிறுத்தி வைத்துள்ளது. அதே போல ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விளையாட விதிக்கப்பட்ட தடை இன்னும் நீடிக்கிறது. இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அவ்வப் போது இந்தியா மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
அதன் காரணமாக அந்த அணியுடன் இருதரப்பு தொடரில் விளையாடுவதையும் இந்தியா 2012 முதல் நிறுத்தி வைத்துள்ளது. அதே சமயம் ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் மட்டும் பொதுவான இடத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் நடைபெற்ற 2023 ஆசியக் கோப்பையில் விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி வென்றது.
கங்குலி காட்டம்:
2025 சாம்பியன்ஸ் ட்ராபியிலும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வெற்றி கண்டது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் 26க்கும் மேற்பட்ட அப்பாவி இந்திய மக்கள் இயற்கை எய்தியது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்கப் போவதில்லை என்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியா கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று பிசிசிஐக்கு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார். எனவே இனிமேல் ஐசிசி தொடரில் கூட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்று கங்குலி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஜோக் பண்ணுதா:
மேலும் இந்தியா அமைதியாகச் செல்வதை பாகிஸ்தான் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதாகவும் அவர் சாடியுள்ளார். இது பற்றி கங்குலி பேசியது பின்வருமாறு. “இந்தியா கிரிக்கெட்டில் பாகிஸ்தானிடம் வைத்திருக்கும் தொடர்புகளை 100% துண்டிக்க வேண்டும். கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் இது போன்ற விஷயங்கள் ஒவ்வொரு வருடமும் நடைபெறுவதால் அது நகைச்சுவையாக மாறி விடுகிறது”
இதையும் படிங்க: 5 மேட்ச் இருக்கு.. பதிரனாவை மட்டும் நம்பாம அவருக்கு சான்ஸ் கொடுங்க.. கும்ப்ளே 2 பரிந்துரைத்த மாற்றம்
“எந்த வகையிலும் இந்தியா மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை சகித்து கொள்ளக்கூடாது” என்று கூறினார். இதற்கிடையே பாகிஸ்தானுடன் வருங்காலத்தில் இருதரப்பு தொடர்களில் இந்தியா விளையாடாது என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஆனால் ஐசிசி தொடர்களில் விளையாடுவது தங்களுடைய கைகளில் இல்லை என்றும் அவர் கூறினார். அது பற்றி ஐசிசி முடிவு எடுக்க வேண்டும் என்று ராஜிவ் சுக்லா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



