ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 26ஆம் தேதி லாகூரில் நடைபெற்ற எட்டாவது லீக் போட்டியில் வலுவான இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 326 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் 177 ரன்கள் குவித்தார்.
அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக அவர் உலக சாதனையையும் படைத்தார். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து கடுமையாக போராடியும் ஆப்கானிஸ்தானின் நல்ல பந்து வீச்சில் 49.5 ஓவரில் 317 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
ஆப்கானிஸ்தானின் எழுச்சி:
அதிகபட்சமாக ஜோ ரூட் 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. மறுபுறம் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இங்கிலாந்து இந்தத் தோல்வியால் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.
முன்னதாக சமீபத்திய வருடங்களில் ஆப்கானிஸ்தான் தங்களுடைய திறமையால் ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடி வருகிறது. குறிப்பாக 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய அந்த அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளை தெறிக்க விட்டு தோற்கடித்தது. மேலும் கடைசி 3 ஐசிசி தொடர்களில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகளில் இந்தியா 21 போட்டிகளில் 20 வெற்றிகளை பெற்ற முதலிடத்தில் இருக்கிறது.
சச்சின் பாராட்டு:
16, 15 வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2, 3வது இடங்களில் உள்ளன. 4வது இடத்தில் ஆப்கானிஸ்தான் 10 வெற்றிகளுடன் இருக்கிறது. 9, 7, 6 வெற்றிகளுடன் நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் 5, 6, 7வது இடங்களில் உள்ளன. இதிலிருந்து தற்சமயத்தில் இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் 2வது சிறந்த ஆசிய அணியாக சாதித்து வருகிறது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: என்ன தம்பி டக்கெட் ஃபைனல் என்னாச்சு? இந்தியாவை துச்சமாக பேசி வீட்டுக்கு கிளம்பிய இங்கிலாந்து
அப்படிப்பட்ட அந்த அணிக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து பின்வருமாறு. “சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக தொடர்ச்சியாக எழுச்சி கண்டு வருவது உத்வேகத்தைக் கொடுக்கிறது. இனிமேலும் அவர்கள் பெறும் வெற்றிகளை அப்செட் (ஆச்சர்யம்) என்று உங்களால் வர்ணிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் வெற்றியை தற்போது பொழுதுபோக்காக உருவாக்கியுள்ளார்கள். இப்ராஹிம் சூப்பரான சதமடித்தார். ஓமர்சாய் அற்புதமாக 5 விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தானுக்கு நினைவுகரமான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். நன்றாக விளையாடினீர்கள்” என்று கூறியுள்ளார்.



