பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது ஆரம்பித்து சில நாட்களான நிலையில் இந்த தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக கலந்து கொண்ட பாகிஸ்தான் அணி தங்களது முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாமிடையே ஏற்பட்டுள்ள பிளவு :
இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள லீக் ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. ஒருவேளை இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பையும் இழந்து விடும்.
இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியானது அவர்களுக்கு மிக முக்கியமான வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என்று பலரும் பேசி வரும் வேளையில் அதனை மேலும் உறுதி செய்யும் வகையிலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் கடந்த நியூசிலாந்து போட்டியின் போது பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக இருந்த பாபர் அசாமை அந்தப் போட்டி முடிந்ததும் பயிற்சியாளர் மற்றும் புதிய கேப்டன் ரிஸ்வான் ஆகியோர் ஓய்வறையில் கடிந்து பேசியதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக அதிருப்தி அடைந்த பாபர் அசாம் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டிக்கு முன்னதாக நேற்று பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெற்ற பயிற்சியில் பாபர் அசாம் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இதுதான் ரோஹித் சர்மாவுக்கு கடைசி ஐ.சி.சி தொடர்.. காரணத்தோடு விளக்கம் கொடுத்த – சஞ்சய் மஞ்சரேக்கர்
இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்காக அவர் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான அகிப் ஜாவித் : பாபர் அசாம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பயிற்சி முகாமுக்கு வரவில்லை என்றும் மற்றபடி அவருக்கும் அணிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.



