இன்னும் ஒரு சில வாரங்களில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது துவங்கவுள்ள வேளையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதி கட்ட இந்திய அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட இந்த முதன்மை இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெறாதது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வருண் சக்ரவர்த்தியை தேர்வு செய்தது இதற்காகத்தான் :
பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் வெறும் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பும்ராவிற்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணா இடம்பெற்றுள்ளார். இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று நட்சத்திர துவக்க வீரரான ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவரை முதன்மை அணியில் எவ்வாறு இணைத்தார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் போட்டிகளிலும் சாதிப்பார் என்ற நம்பிக்கையிலேயே அணியின் நிர்வாகம் அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியிருப்பதாக தெரிகிறது. கூடுதலாக அணியின் பயிற்சியாளர் கம்பீர் அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளதாகவே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற பேச்சும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருண் சக்ரவர்த்தியை அணிக்குள் கொண்டு வர என்ன காரணம்? என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை நீக்கிவிட்டு வருன் சக்ரவர்த்தியை அணிக்குள் கொண்டுவர ஒரே காரணம் தான் உள்ளது. நமது அணியை பொறுத்தவரை மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தும் ஒரு பவுலர் நமக்கு தேவை.
அந்த வகையில் தான் வருண் சக்கரவர்த்தியை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறோம். அவரால் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டை வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி நிச்சயம் பந்து வீச்சில் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அவரை எதிர்த்து இதுவரை விளையாடாத அணிகளுக்கு எதிராக அவர் முக்கியமான ஒரு எக்ஸ் பேக்டராகவும் இருப்பார்.
இதையும் படிங்க : சச்சின், கோலி மாதிரி சுப்மன் கில்லிடமும் அந்த பசி இருக்கு.. இன்னும் பெருசா வருவாரு – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு
அதனாலே அவரை அணியில் சேர்த்துள்ளோம். இருந்தாலும் அவர் பிளேயிங் லெவனில் நேரடியாக இடம்பெற்று விடுவார் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அந்த வகையிலேயே நாங்கள் வலுவான வீரர்களை சரியான இடத்திற்கு தேர்வு செய்வோம் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.



