ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்திய பவுலிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரமான அவர் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தைச் சந்தித்தார். அதிலிருந்து குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் சாம்பியன்ஸ் கோப்பையில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் தற்போது விலகியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை தற்போது கோபமடைய வைக்கிறது. ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்வதற்கு உதவிய அவர் கடந்த வாரம் தான் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
கொல்கத்தா கோட்டா:
மேலும் தற்போதைய இங்கிலாந்து தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவரிடம் பெரியளவில் அனுபவமில்லை. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இரண்டாவது போட்டியிலேயே அடி வாங்கினார். ஆனால் அப்படிப்பட்ட அவரை பும்ராவுக்கு பதிலாக கொல்கத்தா ஐபிஎல் அணிக்காக விளையாடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக கௌதம் கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளதாக ரசிகர்கள் விளாசுகிறார்கள்.
மேலும் என்ன தான் தற்சமயத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் முகமது சிராஜ் 2023 ஆசியக் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். 2023 உலகக் கோப்பையிலும் நன்றாக பவுலிங் செய்த அவர் ராணாவை விட பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டவர். ஆனால் அப்படிப்பட்ட அவரை பும்ராவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்காத கம்பீர், அஜித் அகர்கர் வெறும் ரிசர்வ் பட்டியலில் மட்டுமே தேர்ந்தெடுத்து அவமானப்படுத்தியுள்ளார்கள்.
ரசிகர்கள் விளாசல்:
அந்த வகையில் சிராஜை விட ராணா அனுபவத்திலும் திறமையிலும் உயர்ந்தவரா? என்று ரசிகர்கள் விளாசுகிறார்கள். இது போக ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கு சுந்தருக்கு பதில் வருண் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் இருக்கும் நிலையில் அவரையும் சேர்த்து தற்போது 5 ஸ்பின்னர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்
இதையும் படிங்க: 22 – 25 வயசு இளமை திரும்பாது திறமை மறக்காது.. ஃபார்முக்கு வர அந்த 2 ஜாம்பவான்களிடம் பேசுங்க.. கபில் தேவ்
அப்படி 15 வீரர்களில் 5 பேரை ஸ்பின்னர்களாக தேர்ந்தெடுப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? என்றும் ரசிகர்கள் வினவுகிறார்கள். காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள ஷமியும் இன்னும் முழுமையான ஃபார்முக்கு வரவில்லை. அது போன்ற சூழ்நிலையில் அனுபவமிக்க சிராஜை தேர்ந்தெடுக்காமல் அஜித் அகர்கரும், கம்பீரும் தவறு செய்துள்ளதாக ரசிகர்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.



