இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் போற்றப்படுகிறார். முன்னதாக தோனி முரட்டுத்தனமாக சிக்ஸர்களை அடிப்பதில் வல்லவராக அறியப்படுகிறார். அவருடைய ஹெலிகாப்டர் சிக்ஸர்கள் உலகப் புகழ்பெற்றதாகும்.
ஆனால் அப்படி பெரிய சிக்சர்களை அடிப்பதற்கு தோனி தினமும் லிட்டர் கணக்கில் பால் குடிப்பதாக இந்திய கிரிக்கெட்டில் ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. குறிப்பாக ரிக்கி பாண்டிங் ஸ்ப்ரிங் பேட்டை பயன்படுத்தி இந்தியாவை 2003 உலகக் கோப்பையில் தோற்கடித்ததாக அப்போதைய ரசிகர்கள் நம்பினார்கள். அதே போல தோனியும் சிக்ஸர்கள் அடிக்க லிட்டர் கணக்கில் பால் குடித்ததாக ரசிகர்கள் பேசினார்கள்.
உத்தப்பா மறுப்பு:
இந்நிலையில் இந்தியாவுக்காகவும் சரி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சரி தோனியுடன் விளையாடிய போது அவர் பால் குடித்து பார்த்ததில்லை என்று ராபின் உத்தப்பா கலகலப்பாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனி பால் குடித்து நான் எப்போதும் பார்த்ததில்லை. நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம். அதே சமயம் அவர் தொலைபேசியை தன்னுடன் வைத்துக் கொள்ள மாட்டார்”
“அது மற்றவர்கள் வெறுக்கக்கூடிய பழக்கமாகும். இவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்த பின்பும் கூட தோனியை பார்க்க வேண்டுமெனில் முதலில் அவருடைய மேனேஜரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அவரிடம் உட்கார்ந்து பேசினால் நேரம் போனதே தெரியாதது போன்ற உணர்வு ஏற்படும். ஒரே அறையில் 20 பேர் இருந்தாலும் அவருடன் உங்களுடைய தொடர்பு அப்படியே இருக்கும்”
ஒரே மாதிரியான தோனி:
“2004இல் முதல் முறையாக மும்பையில் தாஜ் ஹோட்டலில் சேலஞ்சர் கோப்பைக்காக விளையாட தங்கி இருந்த போது அவரை சந்தித்தேன். அப்போது தமிழ்நாடு அணியின் மூத்த வீரர் மற்றும் என்னுடைய நல்ல நண்பர் எஸ் ஸ்ரீராம் முதல் முறையாக தோனியை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அவர் தோனியின் நல்ல நண்பர். அப்படித்தான் நான் தோனியை சந்தித்தேன்”
இதையும் படிங்க: அந்த வெற்றி இந்திய ரசிகர்களின் கண்ணை மறைச்சுடுச்சு.. ரோஹித், கோலிக்கு ஜான்டி ரோட்ஸ் ஆதரவு
“2004இல் பார்த்த அதே தோனி தான் இப்போதும் இருக்கிறார். அதே சமயம் அவரிடம் உட்கார்ந்து பேசும் போது வித்தியாசமான நட்பை உணர முடியும்” என்று கூறினார். அந்த வகையில் எப்போதும் ஜென்டில்மேனாக இருக்கும் தோனி அடுத்த வருடம் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார். அந்த வாய்ப்பில் அவர் கோப்பையுடன் விடைபெற வேண்டும் என்பதை ரசிகர்களின் விருப்பமாகும்.



