உலகம் முழுவதிலும் 2025 புத்தாண்டு கோலாகலமாக துவங்கியுள்ளது. அதே சமயம் நிறைவு பெற்ற 2024 வருடம் இந்திய கிரிக்கெட் அணிக்கு கலவையானதாக அமைந்தது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தது. இருப்பினும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது.
அதே சமயம் கடந்த வருடம் ஜஸ்ப்ரித் பும்ரா அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 71 விக்கெட்டுகள் எடுத்த அவர் 2024ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக சாதனை படைத்தார். அது போக 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து அவர் மொத்தம் 21 போட்டிகளில் 86 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
34 வருட சாதனை:
அந்த 86 விக்கெட்டுகளை 13.76 என்ற அற்புதமான சராசரியிலும் 26.9 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஒரு குறிப்பிட்ட காலண்டர் வருடத்தில் “மிகவும் குறைந்த சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டில் விக்கெட்டுகள் எடுத்த வீரர்” என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன் 1990 காலண்டர் வருடத்தில் பாகிஸ்தானுக்காக வக்கார் யூனிஸ் 28 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை 14.88 என்ற சராசரியிலும் 29.6 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்ததே முந்தைய உலக சாதனையாகும். தற்போது அவருடைய 34 வருடங்கள் சாதனையை பும்ரா உடைத்துள்ளார். இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 20க்கும் குறைவான சராசரியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் சமீபத்தில் படைத்திருந்தார்.
நம்பிக்கை நாயகன் பும்ரா:
மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்த அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவியதை மறக்க முடியாது. அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக 30 வயதிலேயே பும்ரா அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். தற்போதைய ஆஸ்திரேலியா தொடரிலும் அவர் 4 போட்டிகளில் 30 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு போராடி வருகிறார்.
இதையும் படிங்க: இந்தியா – ஆஸி 5வது டெஸ்ட் நடைபெறும் சிட்னி மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
ஆனால் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மற்ற வீரர்கள் சுமாராக விளையாடினார்கள். அதனால் நான்கு போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. அடுத்ததாக கடைசி போட்டியில் வென்று குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய இந்தியா போராட உள்ளது.



