மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26ஆம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டில் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 311 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 52, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்களுடன் உள்ளனர்.
இந்திய அணிக்கு இதுவரை அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இந்தத் தொடரின் முதல் போட்டியில் அவருடைய தலைமையில் இந்தியா அற்புதமான வெற்றியை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் தலைமையில் மோசமாக விளையாடி தோற்ற இந்தியா மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது.
மெல்போர்ன் வரலாறு:
அந்த சூழ்நிலையில் இந்தப் போட்டியிலும் முதல் நாளில் இந்திய அணி சுமாராக பந்து வீசி 311 ரன்கள் கொடுத்தது. குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ராவால் கூட ஆரம்பத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக இந்தப் போட்டியில் இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை கண்டு தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில் 90000 ரசிகர்கள் அமரக்கூடிய புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த போட்டிகளில் ஆஸ்திரேலியா 5 முறை மட்டுமே தோற்றுள்ளது. 1895, 1928, 1962 ஆகிய வருடங்களில் இங்கிலாந்தும் 1953, 2008 வருடங்களில் தென்னாப்பிரிக்கா மட்டுமே இங்கு 300 ரன்கள் அடித்த பின்பும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளன.
இந்தியா சாதிக்குமா:
ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட எந்த ஆசிய அணிகளும் மெல்போர்ன் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் அடித்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை. இதை அறியும் ரசிகர்கள் இந்திய ரசிகர்கள் அப்படியானால் இம்முறை தோல்வியா? என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும் கடைசியாக இங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
இதையும் படிங்க: இஷாந்த் சர்மாவை பின்னுக்கு தள்ளி எலைட் லிஸ்ட்டில் இடம்பிடித்து மாபெரும் சாதனை நிகழ்த்திய – ஜஸ்ப்ரீத் பும்ரா
மேலும் 2003 அடிலெய்ட், 2021 காபா மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் 300க்கும் ரன்கள் அடித்த பின்பும் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்துள்ளது. எனவே தன்னம்பிக்கையுடன் போராடினால் இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளது. அதை செய்து வரலாற்றை மாற்றி இந்திய அணி புதிய சரித்திரத்தை படைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



