மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. 1 – 1* (5) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் இந்தத் தொடரை வெல்ல அப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. அதற்கு பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அசத்துவது அவசியமாகிறது.
சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வந்த அவர் இத்தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதனால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தனது விக்கெட்டை கொடுத்து வருகிறார். அதனால் அவர் மீது இந்திய ரசிகர்களே மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகிறார்கள்.
கிப்ஸ் ஆதரவு:
இந்நிலையில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளைப் பற்றிய விவரம் தெரியாமல் விராட் கோலி 9000 டெஸ்ட் ரன்கள் அடித்திருக்க முடியாது என்று தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் சதமடித்த விராட் கோலி 2 வாரத்தில் மோசமாகிவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பாருங்கள் இப்போதும் விராட் கோலியின் தரம் உயர்வாகவே இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பாக அவர் டெஸ்ட் சதம் அடித்தார். அதனால் திடீரென அவர் மோசமான வீரராக உருவாகவில்லை. அவர் தனது சாதனைகளுக்காக பெருமையுடன் இருக்கக்கூடிய வீரர். அவர் தமக்குத்தாமே உயர்தரத்தை எதிர்பார்க்கக் கூடியவர். எனவே அவரை முடிந்து விட்டதாக எழுதுவது அது மிகவும் தவறானது”
மெல்போர்னில் அசத்துவாரு:
“அவர் பேட்டிங் பயிற்சியாளருடன் உட்கார்ந்து எது தவறாக செல்கிறது என்பதைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் என்ன தவறாக செய்கிறீர்கள் என்பது தெரியாமல் இத்தனை வருடங்கள் விளையாடி 9000 டெஸ்ட் ரன்கள் அடிக்க முடியாது. ஒருவேளை அது சிறிய டெக்னிக்கல் விஷயமாக இருக்கலாம். ஆனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்பது விராட் கோலிக்கு தெரியும்”
இதையும் படிங்க: 4 ஆவது போட்டியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் நிதீஷ் ரெட்டி – அவருக்கு பதிலாக விளையாடப்போவது யார்?
“அது மிகப்பெரிய இடமாகும். அதை அவர் விரும்புவார். அந்த இடத்தில் அவர் கண்டிப்பாக ரன்கள் குவிப்பார் என்று நான் ஆதரவு கொடுப்பேன்” எனக் கூறினார். இதற்கிடையே விராட் கோலி கொஞ்சம் பொறுமையாக நின்று 2004 சச்சின் போல கவர் ட்ரைவ் அடிக்காமல் விளையாடினால் பெரிய ரன்கள் குவிக்க முடியும் என்று நிறைய முன்னாள் வீரர்கள்ஆலோசனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



