இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அந்த தொடரில் காயத்தோடு விளையாடியிருந்த அவர் உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு லண்டன் சென்று தனது காயத்திற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு ஓய்வில் இருந்தார்.
பிரச்சனையில் இருந்து மீளாத முகமது ஷமி :
அதனை தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை மேற்கொண்டு வந்த முகமது ஷமி கிட்டத்தட்ட ஓராண்டாக எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த வேளையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக பேசிய முகமது ஷமி தான் இன்னும் முழுமையாக காயத்தில் இருந்து குணமடையவில்லை என்றும் 100% எப்பொழுது முழு உடற்தகுதியுடன் இருக்கிறேனோ அப்போதுதான் அணியில் இடம் பெறுவேன் என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த :
சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடிய அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் அந்த தொடரின் போது மீண்டும் அவருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் முகமது ஷமியின் காயம் முழுவதுமாக குணமடையாமல் இந்திய அணியில் இணைய மாட்டார் என்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவக்குழு எப்போது அவரை முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவிக்கிறதோ அதனை பொறுத்துதான் அவர் அணியில் இடம் பெறுவார் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது 34 வயதாகும் முகமது ஷமி தொடர்ச்சியாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் ரவிச்சந்திரன் அஸ்வின் போல் அவரும் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஏனெனில் இந்திய அணி தற்போது சீனியர் வீரர்களை கடந்து அடுத்த கட்ட வீரர்களை தயார் செய்தும் வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதையும் படிங்க : இது ஒன்னும் அவ்ளோ ஈஸி கிடையாது.. உங்களால் இந்தியாவுக்கே பெருமை.. அஷ்வினை வாழ்த்திய – முரளிதரன்
அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியில் பல இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள வேளையில் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இனி முகமது ஷமியை ஓரங்கட்டவும் வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை முகமது ஷமியை காயத்தை காட்டி பி.சி.சி.ஐ ஓரம் கட்டினால் நிச்சயம் அவராகவே முன்வந்து தனது ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



