இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதை கடந்துள்ள அவர் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரின் 3வது டெஸ்ட் போட்டிக்குப் பின் இந்த முடிவை அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் 2011 உலகக் கோப்பை வெற்றியாளரான அவர் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அத்துடன் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருப்பதற்கு அஸ்வின் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்தளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய அவர் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது வென்றவர் என்ற முத்தையா முரளிதரன் சாதனையும் அஸ்வின் சமன் செய்துள்ளார்.
கும்ப்ளே ஏமாற்றம்:
மொத்தமாக 765 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அனில் கும்ப்ளேவுக்கு பின் 2வது அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இருப்பினும் வெளிநாடுகளில் தமக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்காததாலும் வருங்கால வீரர்களுக்கு வழி விட விரும்புவதாலும் அஸ்வின் இந்த முடிவை அறிவித்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவுக்காக அதிக (619) டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த தம்முடைய சாதனையை அஸ்வின் உடைக்காமலேயே ஓய்வு பெற்றுள்ளது ஏமாற்றமளிப்பதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள் ஆஸ். நீங்கள் இந்தியாவுக்காக சாம்பியன் பவுலராகவும் சாம்பியன் ஆல் ரவுண்டராகவும் செயல்பட்டீர்கள்”
சாம்பியனுக்கு வாழ்த்து:
“நீங்கள் நிச்சயமாக மிஸ் செய்யப்படுவீர்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை தினம் தினம் சுமந்து கொண்டு இருப்பது அவ்வளவு எளிதல்ல. உங்கள் வாழ்க்கை முழுவதும் அதை சரியாக செய்துள்ளீர்கள். நீங்கள் இந்தியாவின் மேட்ச் வின்னராக இருந்தீர்கள். அதனால் இந்திய அணி உங்களை கண்டிப்பாக மிஸ் செய்யும். இன்று உங்களுடைய சர்வதேச கேரியர் முடிந்துள்ளது எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுக்கிறது”
இதையும் படிங்க: தோனி மாதிரி இப்படி பண்ணலாமா.. அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்க.. அஸ்வின் ஓய்வு பற்றி கவாஸ்கர்
“ஏனெனில் நீங்கள் 619 விக்கெட்டுகளை கடந்து செல்வதை நான் பார்க்க விரும்பினேன். ஆனால் ஓய்வு பெறுவதற்கு உங்களிடம் காரணம் இருக்கும். எனவே உங்களின் இரண்டாவது அத்தியாயத்திற்கு வாழ்த்துக்கள். அதுவும் உங்களுடைய முதல் அத்தியாயம் போலவே இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவுக்காக நீங்கள் கொண்ட அற்புதமான கேரியருக்கு மீண்டும் வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட். விரைவில் சந்திப்போம்” என்று பேசினார்.



