இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் தம்முடைய 38 வயதில் ஓய்வு பெற்றுள்ளார். 2010இல் அறிமுகமாகி 3 கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அஸ்வின் மொத்தம் 765 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றியாளரான அவர் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.
ஆனால் இவ்வளவு சாதனைகளை செய்தும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து வெளிநாடுகளில் வாய்ப்பு கொடுக்காமலேயே இருந்தது. குறிப்பாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்படாதது இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக சச்சின் உள்ளிட்ட பலரும் விமர்சித்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தற்போதைய தொடரின் முதல் போட்டியில் அஸ்வின் கழற்றி விடப்பட்டு வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜாம்பவானுக்கே வாய்ப்பில்லை:
2வது போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்வின் மீண்டும் 3வது போட்டியில் கழற்றி விடப்பட்டார். முன்னதாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ரோஹித் சர்மா சொந்தக் காரணத்திற்காக பங்கேற்கவில்லை. அந்தப் போட்டியின் முடிவில் பெர்த் மைதானத்திற்கு சென்று இந்திய அணியுடன் இணைந்த போது ஓய்வு பெற உள்ளது பற்றி தம்மிடம் அஸ்வின் சொன்னதாக ரோஹித் சர்மா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அப்போது அஸ்வினிடம் பேசி சமாதானப்படுத்தி 2வது போட்டியில் விளையாட வைத்ததாகவும் ரோஹித் சர்மா கூறினார். மேலும் “இந்தத் தொடருக்கு தேவையில்லாத நான் மொத்தமாக வெளியேறுவதே சரி! என்ற வகையில் அஸ்வின் குட் பை சொன்னதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். இதிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆதரவு கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ரசிகர்கள் ஆதங்கம்:
அப்படி பயிற்சியாளரிடம் ஆதரவு கிடைக்கவில்லையெனில் அடுத்த தொடர்களிலும் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்தே அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்துள்ளார் என்றே சொல்லலாம். மேலும் 38 வயதில் தாண்டி விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு வழிவிடலாம் என்று கருதியும் அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்கலாம்.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டுக்கு இப்போதான் வந்தாரு.. ஆனா அசத்துறாரு.. சக அணி வீரரை பாராட்டிய – ரோஹித் சர்மா
அந்த வகையில் அஸ்வின் கேரியர் இப்படி திடீரென முடிவதற்கு கௌதம் கம்பீர் ஒரு காரணமாக இருப்பதாக ரசிகர்கள் சந்தேகிக்கிறார்கள். அது போன்ற சூழ்நிலையில் குறைந்தபட்சம் 4வது போட்டியில் விளையாடும் வாய்ப்பு கொடுத்து அஸ்வினை பாராட்டுடன் மரியாதையுடன் வழி அனுப்பி வைத்திருக்கலாமே என்றும் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதை செய்யாத கம்பீர் மற்றும் ரோஹித் மீது ரசிகர்கள் கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.



