பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் சுருண்டது. அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்த நிலையில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்துள்ளது.
இந்திய அணியின் தற்போதைய நிலை என்ன? :
394 ரன்கள் பின்தங்கியவுடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடரவுள்ள இந்திய அணி இந்த முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களுக்கு சுருண்டு விட்டால் இந்திய அணி தோல்வியை நோக்கி பயணிக்கும். ஒருவேளை நான்காவது நாள் ஆட்டத்தில் சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது நாள் முழுவதுமாக பேட்டிங் செய்து விட்டால் இந்த போட்டி டிராவை நோக்கி செல்லும்.
அதே வேளையில் நாளையும் மழை பொழியும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த போட்டி முழுவதுமாக நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் போட்டி டிராவாகும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி செல்லுமா? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
அந்த வகையில் தற்போதைய நிலையில் 2025-ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தற்போதைய சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதே வேளையில் இந்திய அணியை பொறுத்தவரை இந்த மூன்றாவது போட்டி டிராவானால் கடைசி 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். ஒருவேளை கடைசி இரண்டு போட்டியில் ஒரு வெற்றி ஒரு டிராவானால் இலங்கை அணி ஆஸ்திரேலியா அணியை அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியிலாவது வீழ்த்த வேண்டும்.
இதையும் படிங்க : இந்தியாவின் இந்த நிலைக்கு 2014க்கு போன கோலி தான் காரணம்.. சச்சினை பாருங்க.. கவாஸ்கர் கோரிக்கை
ஒருவேளை இந்திய அணி 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் இலங்கை அணி ஆஸ்திரேலியா அணியை வைட்வாஷ் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.



