ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருகிறார். முகமது சிராஜ் முடிந்தளவுக்கு போராடி நிலைமையை சமாளித்து வருகிறார். ஆனால் 3வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடிய ஹர்ஷித் ரானா முதல் போட்டியில் அசத்தினாலும் இரண்டாவது போட்டியில் அடி வாங்கினார்.
அதனால் 3வது போட்டியில் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக அசத்தி வரும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் ஆஸ்திரேலியாவில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் அவரிடம் ஜகீர் கான், வாசிம் அக்ரம் போல் பந்தை ஸ்விங் செய்யும் திறமை இருப்பதாக ரெய்னா பாராட்டியுள்ளார்.
ரெய்னா பாராட்டு:
இருப்பினும் 2025 ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரிலாவது அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக அறிமுகமாகி விளையாட வேண்டும் என்று ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீண்ட நாட்கள் கழித்து வட இந்தியாவில் இருந்து ஒரு உயரமான வேகப்பந்து வீச்சாளரை நான் பார்க்கிறேன்”
“அவர் 6 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர் அவரிடம் நல்ல ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் இருக்கிறது. பவுலிங் செய்யும் போது அவர் தன்னுடைய அனைத்து திறமைகளையும் கொடுக்கிறார். எனவே எனது இதயத்திலிருந்து அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் சொல்வேன். சிவப்பு பந்தில் அசத்துவதற்கு அவருக்கு ஒரு தனித்துவமான கோணம் உள்ளது”
இங்கிலாந்தில் ஸ்விங்:
“வாசிம் அக்ரம், ஜஹீர் கான், ஆசிஷ் நெஹ்ரா, ஆர்பி சிங் ஆகியோர் இருந்தார்கள. அவர்களைப் போல அர்ஷ்தீப் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு மணிக்கட்டு நிலையையும் அதிரடியையும் கொண்டுள்ளார். அதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்க வேண்டும். இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு பெரிய தொடரில் விளையாட செல்ல உள்ளது”
இதையும் படிங்க: ஆர்.சி.பி அணியில் அந்த வாய்ப்பு கெடச்சா அதை கண்டிப்பா ஏத்துக்குவேன் – ராஜத் பட்டிதார் ஓபன்டாக்
“அங்கே அர்ஷ்தீப் புதிய பந்திலும் பழைய பந்திலும் இந்தியாவுக்கு தேவையான விக்கெட்டுகளை கொடுப்பார். அவரிடம் அந்த திறமை இருக்கிறது” என்று கூறினார். முன்னதாக 2022இல் அறிமுகமான அர்ஷ்தீப் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். மேலும் 60 போட்டிகளிலேயே 95 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் தற்சமயத்தில் நல்ல அனுபவத்தை கொண்டுள்ளதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடலாம் என்று ரெய்னா கூறியுள்ளார்.



