ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் அந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக அந்த தொடரில் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் பெஞ்சில் அமர வைத்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் அந்த இருவரும் சேர்ந்து 850க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.
மேலும் ஐசிசி டெஸ்ட் டாப் 10 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்தளவுக்கு அந்த இருவரும் தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களாகவும் விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் கொஞ்சம் பவுன்ஸ் அதிகமாக இருக்கும்.
அஸ்வின் – ஜடேஜா:
எனவே அங்கே ஒரு ஸ்பின்னர் மட்டும் விளையாடினால் போதும் என்று இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. அது போன்ற சூழ்நிலையில் சமீபத்திய நியூசிலாந்து தொடரில் அந்த இருவரை விட அசத்திய மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை தேர்ந்தெடுத்த இந்திய அணி வெற்றியும் கண்டது. இந்நிலையில் இந்தியாவில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய ஜோடிக்கு மாற்று வீரர்கள் இல்லை என்று புஜாரா பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருடைய தரத்தை கொண்ட வீரர்கள் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். உள்ளூரில் நான் நிறைய ஸ்பின்னர்களை பார்த்துள்ளேன். ஆனால் அவர்களுக்கான மாற்று வீரர்கள் உண்மையில் நம்மிடம் இல்லை என்பதே என்னுடைய கருத்து. ஆம் நாம் வளர்க்க வேண்டிய சில திறமையான வீரர்கள் நம்மிடம் உள்ளார்கள்”
புஜாரா பாராட்டு:
“ஆனால் அவர்கள் நம்முடைய ஜாம்பவான்கள். அஸ்வின் அல்லது ஜடேஜா போன்றவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இன்னும் அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு நிறைய பங்காற்ற முடியும் என்று நான் கருதுகிறேன். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு பின் நாம் இங்கிலாந்தில் முக்கியமான தொடரில் விளையாட உள்ளோம்”
இதையும் படிங்க: அதுக்கு மஹி பாய் தான் காரணம்.. 13 கோடி வெச்சுகிட்டு சிஎஸ்கே போராடியதே பெருசு.. சஹர் நெகிழ்ச்சி
“அங்கே அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடியாக விளையாட முடியுமா? என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அவர்களில் ஒருவர் பிளேயிங் லெவனில் இருந்தால் போதும் என்று நீங்கள் விரும்புவீர்களா? அல்லது வாஷிங்டன் சுந்தர் விளையாட போகிறார் என்றால் அவருடைய ஜோடியாக வேறு யாரேனும் ஒருவர் இருக்கலாம்” என்று கூறினார். அந்த வகையில் 36 வயதை கடந்து விட்ட அஸ்வின் ஜடேஜா இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



