ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது அனைவரையும் பாராட்ட வைத்தது. ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இந்த தொடரில் இந்திய அணி தோற்கும் என்று பலரும் கணித்தார்கள்.
ஆனால் முதல் போட்டியிலேயே 150க்கு ஆல் அவுட்டான பின்பும் இந்தியா போராடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக ரோகித் சர்மா இல்லாமலேயே பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. இந்நிலையில் 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோற்ற பின்பும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அபார கம்பேக் கொடுத்துள்ளதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் கம்பேக்:
மேலும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இப்படி மோசமாக தோற்று தாம் அதிகமாக பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால் உலகெங்கிலும் உள்ள நம்மில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலிய அணி இப்படி கீழே செல்வதை பார்த்ததில்லை”
“இந்தியா தொடரை நன்றாக துவங்கியதை பார்ப்பது சிறப்பாக இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியால் அவர்கள் இங்கே நன்றாக துவங்க வேண்டிய நிலையில் இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கையில் பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருந்தார்கள். ஆனால் முதல் போட்டியில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தங்களை உட்படுத்திக் கொண்டு அவர்கள் விளையாடி வென்ற விதம் மிகவும் முக்கியம்”
ஏபிடி பாராட்டு:
“முதல் இன்னிங்ஸில் 150க்கு ஆல் அவுட்டான பின்பும் அவர்கள் போராடி வந்தார்கள். பும்ரா தலைமையில் அனைவரும் பந்து வீச்சில் சேர்ந்து அட்டாக் செய்தார்கள். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நான் ஒவ்வொரு பந்தையும் பார்த்தேன். கடினமான நேரத்தில் இருந்த விராட் கோலி அற்புதமான விளையாட்டு வீரர். அந்தப் போட்டியில் போராடி சதத்தை அடித்த போது அவருடைய முகத்தில் பெரிய நிம்மதி இருந்ததை நம்மால் பார்க்க முடிந்தது”
இதையும் படிங்க: தங்களை வீழ்த்திய இந்தியாவின் பும்ரா, கோலியை வேற லெவலில் வாழ்த்திய.. ஆஸ்திரேலிய பிரதமர்
“விராட் கோலிக்கும் இந்திய அணிக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே சமயம் ஆஸ்திரேலியா மீண்டு வருவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் இந்த தொடர் மிகுந்த சுவாரசியம் நிறைந்த தொடராக இருக்கும்” என்று கூறினார். இதை அடுத்து இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா விளையாட உள்ளது.



