ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 8, மெக்ஸ்வீனி 10, ஸ்டீவ் ஸ்மித் 0 ரன்களில் கேப்டன் பும்ரா அவுட்டாக்கி தெறிக்க விட்டார். அடுத்ததாக வந்த மிட்சேல் மார்ஷ் 6, லபுஸ்ஷேன் 2 ரன்களில் சிராஜ் வேகத்தில் நடையை கட்டினார். இந்தியாவுக்கு தொல்லையை கொடுக்கக்கூடிய ட்ராவிஸ் ஹெட்டை 11 ரன்களில் ஹர்ஷித் ராணா அவுட்டாக்கி தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தார்.
மிரட்டிய பும்ரா:
அதே போல கேப்டன் பட் கமின்ஸை 3 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா நங்கூரமாக விளையாடி அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்த அலெக்ஸ் கேரியையும் பெவிலியன் அனுப்பினார். இறுதியில் போராடியாக ஸ்டார்க்கை 26 ரன்களுக்கு அவுட்டாக்கி ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5, சிராஜ் 2, ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்கள்.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோருக்கு சுருட்டி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1947ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 107 ரன்களுக்கு இந்தியா சுருட்டியதே முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராகும். மேலும் இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் (104) பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. 1981ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக 83க்கு ஆல் அவுட்டானதே ஆஸ்திரேலியாவின் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோர்.
இந்தியா அபாரம்:
அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்கள் மட்டுமே அடித்து முன்னிலை ரன்கள் (46) பெறுவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கில் சுமாராக விளையாடியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனாலும் பந்து வீச்சில் போராடி ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தியுள்ள இந்தியா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மிட்சல் ஸ்டார்க்கா இது? இதுதாங்க டெஸ்ட் கிரிக்கெட்.. என்ன வேணும்னா நடக்கும் – பெர்த் டெஸ்ட் சுவாரசிய சம்பவம்
இதை அடுத்து 2வது இன்னிங்ஸில் இந்தியா போராடி குறைந்தது 200 – 300 ரன்கள் அடிப்பது அவசியமாகிறது. ஏனெனில் பிட்ச் இன்னும் பேட்டிங் செய்வதற்கு சவாலாக மாறலாம். அதனால் எப்படியாவது இந்திய பேட்ஸ்மேன்கள் நங்கூரமாக விளையாடி 250க்கும் மேற்பட்ட இலக்கை இலக்காக நிர்ணயிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்.



