ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் சவாலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்த தொடரில் 3வது இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பயிற்சியின் போது காயத்தை சந்தித்த அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பாரா என்பதும் சந்தேகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் 2021 காபா மைதானத்தில் 91 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆஸ்திரேலிய தொடரில் அசத்துவதற்கு தேவையான அனுபவத்தை கொண்டிருப்பதாக புஜாரா தெரிவித்துள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் தரமான பந்துகளை தவிர்த்து எந்த பந்துகளை அடிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என கில்லுக்கு அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதே போல 3வது இடத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கும் ராகுல் விளையாட வேண்டும் என்றும் புஜாரா கேட்டுக் கொண்டுள்ளார்.
புஜாரா அட்வைஸ்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டிகள் முன்னோக்கி செல்கின்றன. இப்போதெல்லாம் நிறைய வீரர்கள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வருகிறார்கள். ஒவ்வொரு வீரரும் தங்களுடைய பலத்தை அடிப்படையாக வைத்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். நான் என்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை பொறுத்து பேட்டிங் செய்தேன்”
“என்னுடைய நாட்களில் பொறுமை மற்றும் நிதானம் ஆகியவற்றுக்கு அதிகப்படியான மதிப்பு கொடுத்து விளையாட வேண்டும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. ஆனால் நவீன கிரிக்கெட்டில் விளையாடும் பேட்ஸ்மேன்களின் ஸ்டைலை நீங்கள் மாற்ற முடியாது. எனவே அவர்கள் தங்களுடைய பலத்தை அடிப்படையாக வைத்து விளையாடலாம். சுப்மன் கில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விளையாடியுள்ளதால் இங்குள்ள சூழ்நிலையை சமாளிக்கும் திறன் அவருக்கு உள்ளது”
3வது இடத்தில் ராகுல்:
“அவர் தன்னுடைய ஸ்டைலுக்கு ஆதரவு கொடுத்து விளையாட வேண்டும். அதே சமயம் நீங்கள் எந்த சாட்டுகளை அடிக்க வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தியா போல உங்களால் ஆஸ்திரேலியாவில் அனைத்து ஷாட்டுகளையும் அடிக்க முடியாது. அவர் தனது பலத்தை அறிந்து முதலில் தவிர்க்க வேண்டிய ஷாட்டுகளை கண்டறிய வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியா தோற்க எதுவுமில்லை உண்மையா பிரச்சனை ஆஸிக்கு தான்.. வாசிம் ஜாபரை கலாய்த்த மைக்கேல் வாகன்
“ராகுல் துவக்க வீரராக விளையாட உள்ளதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவருக்கு உள்ள அனுபவத்திற்கு மூன்றாவது இடத்தில் விளையாடுவதை நான் தேர்ந்தெடுப்பேன். 5, 6வது போன்ற மிடில் ஆர்டரிலும் அவரால் விளையாட முடியும். இருப்பினும் மூன்றாவது இடத்தில் அவர் பேட்டிங் செய்தால் இந்திய அணிக்கு பயன் கிடைக்கும் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.



