இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. அது போன்ற சூழ்நிலையில் துணை கேப்டனாக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் பட் கமின்ஸ் போல பும்ரா அனுபவமிக்கவர் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கமின்ஸ் போல:
இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் கேப்டன்ஷிப் என்பது பும்ராவுக்கு கடினமான விஷயமாகும். ஆஸ்திரேலியாவின் கேப்டனாக பட் கமின்ஸ் வந்த போது நான் இந்த கேள்வியை நான் கேட்டுள்ளேன். அதாவது கேப்டனாக இவர் தமக்குத் தாமே எவ்வளவு பந்து வீசுவார்? கேப்டனாக இருப்பதால் அதிகமாக வீசுவரா? மாட்டாரா? என்பது போல் கேள்வி எழுப்பினேன்”
“ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா நல்ல அனுபவம் கொண்டவர். எனவே அவருக்கு எப்போது பந்து வீச வேண்டும் என்பது நன்றாக புரியும். இந்திய அணியில் அவரைச் சுற்றி நிறைய வீரர்கள் அனுபவமிக்கவர்களாக உள்ளனர். அதுவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். அது போன்ற வீரர்கள் இருக்கும் போது நீங்கள் அவர்களிடம் சரியான கேள்வி கேட்டு பயன்படுத்தினால் போதும்”
சரியான பும்ரா:
“ஏனெனில் நாம் எவ்வளவு கிரிக்கெட்டை விளையாடியிருந்தாலும் அனைத்து நேரங்களிலும் நாம் சரியாக இருக்க முடியாது. நாளின் இறுதியில் கேப்டனாக நீங்கள் தான் கடைசி முடிவை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் மற்றவர்களிடம் நீங்கள் பெறும் ஆலோசனைகளும் நல்லதாக இருக்கும். அது போன்ற வீரர்கள் கேப்டனுக்கு அழுத்தமான நேரங்களை குறைக்க உதவுவார்கள்”
இதையும் படிங்க: கையெழுத்து போட்டதை செய்ங்க போதும்.. இந்தியா வரலைன்னா பாகிஸ்தான் இதை செய்யாது.. ரசித் லதீப்
“இந்திய அணியில் பும்ரா நீண்ட காலமாக வேகப்பந்து வீச்சு கூட்டணியின் தலைவராக இருக்கிறார். எனவே அவர் தான் உங்களுடைய முதன்மையான வீரர்” என்று கூறினார். முன்னதாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட போட்டியில் ரோகித் சர்மா விலகினார். அப்போது ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.



