197 விக்கெட்ஸ்.. 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போல.. அஸ்வினை நம்பாமல் வெற்றியை கோட்டை விட்ட ரோஹித்

Rohit Sharma 3
- Advertisement -

பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டிகள் தோற்றது. அதன் காரணமாக ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா இத்தொடரில் வெல்ல கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக அந்தப் போட்டியில் கடைசி நாளில் 107 என்ற இலக்கை நியூசிலாந்து துரத்தியது. அப்போது பிட்ச் சுழலுக்கு சாதகமாக மாறியிருந்த நிலையில் டாம் லாதம், டேவோன் கான்வே ஆகிய 2 இடது கை பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை துவங்கினர். மறுபுறம் உலகிலேயே இடது கை பேட்ஸ்மேன்களை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற உலக சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

- Advertisement -

குறைத்து மதிப்பிட்ட ரோஹித்:

எனவே அவரை கேப்டன் ரோகித் சர்மா சில ஓவர்கள் முடிந்ததும் பந்து வீச கொண்டு வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதை செய்யாத அவர் பும்ரா, சிராஜ் ஆகியோரை மட்டுமே பயன்படுத்தினார். அதில் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் சிராஜ் தடுமாற்றமாக பந்து வீசினார். அடுத்ததாக மற்றொரு இடது கை பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திர பேட்டிங் செய்ய வந்தார்.

அப்போதும் அஸ்வினை கொண்டு வராத அவர் ஜடேஜா, குல்தீப் ஆகியோரை பயன்படுத்தினார். அதற்குள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் வெற்றியை பரித்தனர். இறுதியில் நியூசிலாந்துக்கு வெறும் 10 ரன்கள் தேவைப்பட்ட போது அஸ்வினுக்கு வெற்றி பறிபோன பின் ரோகித் சர்மா 2 ஓவர்களை வழங்கினார். அதற்குள் போட்டியும் முடிந்து விட்டது.

- Advertisement -

2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போல:

இத்தனைக்கும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் 3, 4வது இன்னிங்ஸில் அஸ்வின் 197 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக பெங்களூருவில் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் கடைசியாக ஆஸ்திரேலியாவை 112 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்த போது 6 விக்கெட்டுகள் எடுத்தார். இவ்வளவு அனுபவத்தை கொண்டிருக்கும் அவரை ரோஹித் பயன்படுத்தியிருந்தால் மடமடவென சில விக்கெட்டுகள் விழுந்து ஒருவேளை வெற்றி கிடைத்திருக்கலாம்.

இதையும் படிங்க: சொல்றதை கேட்கிறதில்ல.. காயமடைந்த ரிஷப் பண்ட் அடுத்த போட்டியில் ஆடுவாரா? கேப்டன் ரோஹித் பதில்

ஆனால் அதை ரோஹித் சர்மா செய்யாதது தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்தது. சொல்லப்போனால் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வினை தேர்ந்தெடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சச்சின் டெண்டுல்கர் போன்ற பலரும் விமர்சித்தனர். அதே போல இந்தப் போட்டியிலும் அஸ்வினை குறைத்து மதிப்பிட்டு ரோஹித் சர்மா பயன்படுத்தாதது போராடியிருந்தால் கிடைத்திருக்க வேண்டிய வெற்றியை தாரை வார்த்துள்ளது எனலாம்.

Advertisement