பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஆனால் மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் வேகத்துக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது.
அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக அந்தப் போட்டியில் வேகத்துக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது 46க்கு ஆல் அவுட்டாக முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல நான்காவது இடத்தில் விளையாடக்கூடிய விராட் கோலியை 3வது இடத்தில் களமிறக்கியதும் பெரிய தவறாக அமைந்தது.
விராட் கோலிக்கு பாராட்டு:
இருப்பினும் சுப்மன் கில் காயமடைந்த நிலையில் சர்பராஸ் கான் இடத்தை மாற்ற விரும்பவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். அதனாலேயே சீனியராக பொறுப்பை எடுத்துக் கொண்டு விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கியதாக ரோஹித் சர்மா விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் அணிக்காக 3வது இடத்தில் களமிறங்கிய விராட் கோலிக்கு தலை வணங்குவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டது பின்வருமாறு. “விராட் கோலிக்கு தலை வணங்குகிறேன். அணிக்கு தேவைப்படுவதால் அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். கங்குலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கூட வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓப்பனிங் செய்ய விரும்பினார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் மேலே பேட்டிங் செய்ய விரும்பியதில்லை”
விராட் கோலியின் தவறு:
“இருப்பினும் இந்தியாவுக்காக இப்போட்டியில் அதை செய்துள்ள விராட் கோலி உண்மையான சாம்பியன்” எனக் கூறினார். ஆனால் அதைப் பார்த்த ரசிகர்கள் 3வது இடத்தில் களமிறங்கி விராட் கோலி டக் அவுட்டானாரே? அவருக்கு பதிலடி கொடுத்தனர். அதற்கு விராட் கோலி பேட்டிங்கில் செய்த தவறு பற்றி சஞ்சய் மஞ்ரேக்கர் சுட்டிக்காட்டியது பின்வருமாறு.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா இந்த கேப்டன்ஷிப் வித்தையை தோனியிடம் கத்துக்கனும்.. சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுரை
“ஏற்கனவே நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். விராட் கோலி ஒவ்வொரு பந்தையும் முன்னங்காலில் (ஃபிரன்ட் ஃபுட்) சென்று அடிக்க வேண்டும் என்று விரும்புவதால் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். லென்த் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. இன்று அவுட்டான அதே பந்தை பின்னங்கால் (பேக் ஃபுட்) பயன்படுத்தி விளையாடியிருந்தால் அவுட்டாகாமல் சமாளித்திருக்கலாம்” என்று கூறினார்.



