இந்தியா – வங்கதேசம் 2வது டெஸ்ட் குறுக்கே வரும் மழை.. போட்டி நடக்குமா? கான்பூர் வெதர் ரிப்போர்ட்

Kanpur Rain
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானை போல எங்களை சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை வங்கதேசத்துக்கு நிரூபித்த இந்தியா 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி துவங்குகிறது.

அந்தப் போட்டியில் வென்று குறைந்தபட்சம் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்து இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பெற வங்கதேசம் போராட உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் வலுவான இந்தியா அப்போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தி ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது. அப்போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

குறுக்கே வரும் மழை:

இருப்பினும் அப்போட்டி மழையால் பாதிப்படையும் சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் கான்பூரில் முதல் 3 நாட்கள் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக செப்டம்பர் 27ஆம் தேதி சராசரியாக கான்பூரில் 50 – 70% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

அதனால் முதல் நாள் போட்டி டாஸ் கூட வீசப்படாமல் பெருமளவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல 2வது நாளும் சராசரியாக 50 – 60% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் 3வது நாளும் 40 – 50% சாதாரண மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது.

- Advertisement -

கான்பூர் வானிலை:

ஆனால் செப்டம்பர் 30ஆம் தேதி மற்றும் அக்டோபர் ஒன்றாம் தேதி ஆகிய கடைசி 2 நாட்களில் முழுமையாக மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அந்த நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நிறைய முன்னேறிட்டாரு.. இப்போதெல்லாம் அவருக்கு எதிரா பந்து வீசுவது கஷ்டம்.. ஜோஸ் ஹேசல்வுட் பேட்டி

இருப்பினும் இந்திய அணி சென்னையில் வங்கதேசத்தை மூன்றரை நாட்களில் தோற்கடித்தது. எனவே சராசரியாக இரண்டரை நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் எஞ்சிய 2 – 3 நாட்கள் போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. அந்த நாட்களிலேயே வங்கதேசத்தை தோற்கடித்து இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் டிராவில் முடிந்தாலும் 1 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement