இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த ஊரில் சதமடித்து 113, ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்தனர்.
வங்கதேசத்திற்கு அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் எதிர்பார்த்ததை போலவே இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் கிடையாது:
அதன் பின் ஃபாலோ ஆன் கொடுக்காமல் 227 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 287-4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் சதமடித்து 109, சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்தனர். வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக மெகதி ஹசன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இறுதியில் 515 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஜாகிர் ஹசன் 33, சாத்மன் இஸ்லாம் 35 ரன்களில் பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து கேப்டன் நஜ்முல் சாண்டோ நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் வந்த மோனிமுல் ஹைக் 13, முஸ்பிகர் ரஹீம் 13, ஷாகிப் அல் ஹசன் 25, மெஹதி ஹசன் 8 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார்கள்.
சாதனை வெற்றி:
இறுதியில் அரை சதமடித்து போராடிய கேப்டன் சான்டோவை 82 ரன்களில் ஜடேஜா அவுட்டாக்கினார். அதனால் வங்கதேசத்தை 234 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1- 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் வாயிலாக வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2017ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் 208 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். அத்துடன் சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தியதை போல இந்தியாவையும் தோற்கடிப்போம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ சவால் விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: இரண்டு இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் விராட் கோலி செய்த செயல் – இதுவரை நாம பாத்ததில்லை
ஆனால் சவால் விடுத்த வங்கதேசத்தை மூன்றரை நாட்களில் தெறிக்க விட்டு தோற்கடித்த இந்தியா நாங்கள் பாகிஸ்தான் கிடையாது என்பதையும் சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதையும் நிரூபித்துள்ளது. இந்திய அணிக்கு அஸ்வின் 6, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்து வங்கதேசத்தின் சவால் கதையை முடித்தனர்.



