இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதன் வாயிலாக எம்.எஸ். தோனிக்கு பின் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையும் ரோஹித் படைத்தார். மேலும் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் இந்தியா சந்தித்து வந்த தோல்விகளை ஒரு வழியாக ரோஹித் சர்மா உடைத்தார்.
முன்னதாக தோனி, விராட் கோலியை விட ரோஹித் சர்மா எதிரணியை வீழ்த்துவதற்கு போட்டி நாளுக்கு முன்பாக பெரிய திட்டத்தை வகுப்பார் என்று அஸ்வின் சமீபத்தில் கூறியிருந்தார். அது போன்ற ஒரு அனுபவத்தை முன்னாள் இந்திய வீரர் பியூஸ் சாவ்லா தற்போது பகிர்ந்துள்ளார். குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் விளையாடினார்.
இரவு 2.30 மணிக்கு திட்டம்:
அப்போட்டியில் வார்னரை வீழ்த்துவதற்கான திட்டங்களை ரோகித் சர்மா முதல் நாள் இரவு 2.30 மணிக்கு கொடுத்ததாக சாவ்லா தெரிவித்துள்ளார். அத்துடன் சமீபத்திய ஐசிசி தொடர்களில் தமது சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மா மற்ற இந்திய வீரர்களுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்ததாக பியூஸ் சாவ்லா பாராட்டியுள்ளார்.
அந்த வகையில் ரோஹித் சர்மா வெறும் கேப்டன் கிடையாது லீடர் என்று பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவுடன் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். அதனால் அவருடன் கச்சிதமாக விளையாடும் சூழ்நிலையை நான் எட்டியுள்ளேன். நாங்கள் களத்திற்கு வெளியேயும் உட்கார்ந்து விவாதிப்போம். ஒருமுறை இரவு 2.30 மணிக்கு மெசேஜ் செய்த அவர் நீங்கள் விழித்திருக்கிறீர்களா என்று கேட்டார்”
லீடர் ரோஹித் சர்மா:
“அதன் பின் மைதானத்தை பேப்பரில் வரைந்த அவர் டேவிட் வார்னரை அவுட்டாக்குவதை பற்றி விவாதித்தார். அந்த நேரத்தில் கூட ரோஹித் சர்மா என்னிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். கிரிக்கெட்டில் கேப்டன் மற்றும் லீடர் உள்ளனர். ரோஹித் சர்மா கேப்டன் கிடையாது. அவர் லீடர்”
இதையும் படிங்க: இந்திய ஜாம்பவான்கள் பிசிசிஐக்கு புத்திமதி சொல்லுங்க.. இல்லனா விளைவுகளை சந்திப்பீங்க.. மொய்ன் கான் பேட்டி
“கடந்த 2023 உலகக் கோப்பையிலும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அதிரடியாக பேட்டிங் செய்த அவர் மற்ற பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கினார். அவர் உண்மையான லீடர். அவர் உங்களுக்கு சுதந்திரமான சுதந்திரமான வாய்ப்புகளை வழங்குவார்” என்று கூறினார். இதை தொடர்ந்து ரோகித் சர்மா செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்தியாவின் கேப்டனாக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



