தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணிக்காக பாபா இந்திரஜித் மற்றும் பாபா அபாரஜித் ஆகிய இரட்டை சகோதரர்கள் விளையாடி வருவதை ரசிகர்கள் அறிவார்கள். கடந்த 2011 முதல் அந்த சகோதரர்கள் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து தமிழக அணிக்காக விளையாடி வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு இதுவரை இந்திய அணியில் மட்டும் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அணியிலிருந்து வெளியேறி கேரளா அணிக்காக விளையாட உள்ளதாக பாபா அபாரஜித் அறிவித்துள்ளார். இதுவரை தமிழ்நாடு அணிக்காக 90 முதல் தரம், 107 லிஸ்ட் ஏ, 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் முறையே 4571, 3869, 1147 ரன்களை குவித்துள்ளார். மேலும் ஆல் ரவுண்டரான அவர் இதுவரை மொத்தமாக 149 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
தமிழ்நாடு டூ கேரளா:
இருப்பினும் கடந்த ரஞ்சிக் கோப்பை தொடரில் அவரை தமிழ்நாடு வாரியம் தமிழக அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கவில்லை. மறுபுறம் கேரளா அணியிலிருந்து ஸ்ரேயாஸ் கோபால் வெளியேறி மீண்டும் கர்நாடக அணிக்காக விளையாட உள்ளார். எனவே அந்த இடத்தில் பாபா அபாரஜித்தை விளையாட வைக்க கேரளா அணியின் பயிற்சியாளர் வெங்கட்ரமணா அணுகியுள்ளார்.
குறிப்பாக தமிழ்நாடு அணியில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட அபாரஜித்துக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் கேரளா அணியில் அப்படி ஒரு வீரர் தேவைப்படுவதால் அவரை வெங்கடரமணா அணுகியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த பாபா அபாரஜித் அதற்காக தமிழ்நாடு வாரியத்திடம் முறைப்படி அனுமதி கேட்டு தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வரும் சீசனில் அவர் கேரளா அணிக்காக சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாட உள்ளார். அதே சமயம் தாம் வளர்வதற்கு வாய்ப்பும் ஆதரவும் கொடுத்த தமிழ்நாடு அணிக்கும் வாரியத்திற்கும் ரசிகர்களுக்கும் பாபா அபாரஜித் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தங்கள் அணிக்கு வருவதை சஞ்சு சாம்சனும் விரும்புவதாக பயிற்சியாளர் வெங்கடரமணா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பணம் ஒரு மேட்டரே இல்ல.. இந்த காரணத்தால் தான் வெ.இ டெஸ்ட் அணிக்காக வீரர்கள் விளையாடல.. ரசல் ஓப்பன்டாக்
அது போக சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாட சென்றால் கேரள அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு அபாரஜித்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் பயிற்சியாளர் வெங்கடரமணா உறுதி செய்துள்ளார். அந்த வகையில் தமிழ்நாடு அணியிலிருந்து வெளியேறும் அபாரஜித்துக்கு தமிழக ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர். அதே போல குல்தீப் சென் தமிழக அணியிலிருந்து மீண்டும் மத்திய பிரதேச அணிக்கு விளையாட செல்ல முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



