ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியர்களை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது மிகவும் கடினமான செயலாகும். இருப்பினும் அதை விராட் கோலி தலைமையில் செய்த இந்தியா 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று சரித்திர படைத்தது.
அதற்கு பதிலடியாக 2020/21 தொடரின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா வரலாற்று தோல்வியை இந்தியாவுக்கு பரிசளித்தது. ஆனால் அதற்கெல்லாம் அசராத இந்தியா ரகானே தலைமையில் அபாரமாக விளையாடி 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைத்தது.
மைண்ட் கேம்ஸ்:
அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. ஆனால் கடந்த 2 தொடர்களில் சந்தித்த தோல்விக்கு இம்முறை இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் தோற்கடித்து ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்கும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். இம்முறை 5 போட்டிகள் நடைபெறுவது ஆஸ்திரேலியாவுக்கு சாதகம் என்றும் பாண்டிங் கூறினார்.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங் இப்படியெல்லாம் பேசி இந்தியாவுடன் மனதளவில் விளையாடத் துவங்கியுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். மேலும் பும்ரா, ரோஹித் போன்ற முக்கிய இந்திய வீரர்கள் விளையாடமல் போனால் மட்டுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். மற்றபடி இம்முறையும் இந்தியா வெல்லும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“ஆஸ்திரேலியா 3 – 1 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடிக்கும் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது பெரிய கருத்து. மனதளவிலான போட்டிகள் துவங்கியுள்ளது. இருப்பினும் இந்த மைண்ட் கேம்களை இந்திய வீரர்களும் பயிற்சியாளர்களும் அறிவார்கள். இந்தியா கடந்த 2 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை ஆஸ்திரேலியாவில் வென்றுள்ளது. அப்போதைய நிலைமைக்கும் இப்போதைய நிலைமைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும்”
இதையும் படிங்க: ரிட்டயர்டு ஆகி 5 வருஷம் தோனியின் இந்த சாதனையை யாராலும் தொட முடியல – இதுதான் தலையோட ஸ்பெஷல்
“ஆஸ்திரேலியர்களை பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். அவர்கள் இது போன்ற கருத்துக்கணிப்புகளை சொல்வதை பொழுதுபோக்காக வைத்திருக்கின்றனர். ஒருவேளை பும்ரா, ஷமி, சிராஜ், கோலி, ரோஹித், ஜெய்ஸ்வால் இல்லையென்றால் மட்டுமே ஆஸ்திரேலியா 5 – 0 கணக்கில் இந்தியாவை தோற்கடிக்க முடியும்” என்று கூறினார். முன்னதாக 2020/21 தொடரில் 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று மைக்கேல் வாகன், மைக்கேல் கிளார்க் போன்றவர்கள் கணித்தனர். ஆனால் அதை இந்தியா பொய்யாக்கியது குறிப்பிடத்தக்கது.



