அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது (0-2) என்ற கணக்கில் இழந்து ஏமாற்றத்தை அளித்தது.
கம்பீரின் தலைமையில் இந்திய அணி டி20 தொடரில் வெற்றியும், ஒருநாள் தொடரில் தோல்வியையும் சந்தித்தது. இலங்கை அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரின் தோல்வி இந்திய அணியை சற்று வருத்தமடைய செய்துள்ளது. மேலும் ரசிகர்களுக்கும் இந்த தோல்வி ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு வீரர்கள் தயாராகும் வகையில் கடுமையான சில திட்டங்களோடு பயிற்சியாளர் கம்பீர் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.
அந்த வகையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி இந்திய டெஸ்ட் அணியில இடம் பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கௌதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே உள்ளூர் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்த ரோகித் சர்மா, விராட் கோலி கூட எதிர்வரும் துலீப் டிராபி தொடரில் விளையாட இருக்கின்றனர்.
இந்நிலையில் சீனியர் வீரர்களான அவர்கள் இருவர் மட்டுமின்றி இந்திய அணியின் அனுபவ நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் துலீப் டிராபில் விளையாட வேண்டும் என கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளாராம். ஏனெனில் சமீப காலமாகவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அஸ்வின் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதால் அதற்கு தயாராகும் வகையில் துலீப் டிராபி தொடரில் விளையாட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 12 ஆண்டுகளுக்கு பிறகு சாதாரண வீரர்களாக மாற்றப்பட்ட ரோஹித் மற்றும் கோலி – எல்லாம் கம்பீரால் தான்
இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் துலீப் டிராபி தொடரில் விளையாடுவார் என்று தெரிகிறது. அவரை தவிர்த்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கப்போகும் அனைத்து இளம் வீரர்களும் இந்த தொடரில் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த பயிற்சியில் ஒரே ஒரு வீரராக பும்ராவுக்கு மட்டும் பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



