இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அந்த தோல்வியால் கடந்த 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரில் தோற்காமல் அசத்தி வந்த இந்தியாவின் வெற்றி நடை முடிவுக்கு வந்துள்ளது. அத்துடன் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கையிடம் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்விக்கு இலங்கையின் ஸ்பின்னர்களை சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் அவருடன் ஓப்பனிங்கில் களமிறங்கிய துணை கேப்டன் சுப்மன் கில் அதே பிட்ச்சில் அதே பவர் பிளேவில் அதே பவுலர்களுக்கு எதிராக திணறலாக விளையாடி தோல்விக்கு முக்கிய காரணமானார்.
சுமாரான கில்:
போதாகுறைக்கு அவரை துணை கேப்டனாக தேர்வுக்குழு வளர்க்க நினைப்பதால் இந்தியாவின் வருங்காலம் என்ன ஆகுமோ? என்று ரசிகர்கள் கவலையில் அமைந்துள்ளனர். இந்நிலையில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயரை விட ஜெய்ஸ்வால் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் சுழலுக்கு எதிராக பல மடங்கு சிறந்த வீரர்கள் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சூர்யகுமார் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை சிறப்பாக அடிப்பார் என்று பசித் அலி கூறியுள்ளார். எனவே அவர்களை இந்தத் தொடரில் தேர்ந்தெடுக்காதது இந்தியாவின் தோல்விக்கு காரணமானதாக அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்குத் தெரிந்ததை இந்த தொடர் காண்பித்துள்ளது. உண்மையில் சுப்மன் கில்லை விட ஜெய்ஸ்வால் சிறந்த வீரர் என்பதை மக்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்”
“ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்காமல் தேர்வுக் குழுவினர் மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். அதே போல சூரியகுமாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி இன்னும் 6 மாதங்களில் வர உள்ள நிலையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு 3 போட்டி மட்டுமே உள்ளது. அல்லது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். என்னுடைய அனுபவத்தில் ஜெய்ஸ்வால் அனைத்து வகையிலும் கில்லை விட சிறந்தவர்”
இதையும் படிங்க: இலங்கை ஸ்பின்னர்களை பொளந்துருப்பாரு.. அவரை செலக்ட் பண்ணாம கம்பீர் வெற்றியை விட்டாரு.. சல்மான் பட் விமர்சனம்
“அதே போல ஸ்பின்னர்களுக்கு எதிராக சூரியகுமார் 1000 மடங்கு சிறந்தவர். குறிப்பாக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் நீங்கள் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அதிகம் அடிக்க வேண்டும். அந்தத் திறமையைக் கொண்டுள்ள சூரியகுமார் எளிதாக ஸ்பின்னர்களை எதிர்கொண்டு இத்தொடரை இந்தியாவுக்கு வென்று கொடுத்திருப்பார். ஜெய்ஸ்வாலும் ஸ்பின்னர்களை நன்றாக அடிக்கக் கூடியவர்” என்று கூறினார்.


