தமிழக வீரர் சுந்தரை ஜாலியாக அடிக்க சென்ற கேப்டன் ரோஹித்.. ரியான் பராக்கை கலாய்த்த விராட் கோலி

IND vs Sl Moment
- Advertisement -

இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 50 ஓவரில் போராட்டமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 240/9 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு நிசாங்கா 0, சமரவிக்கிரமா 14, லியனகே 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அவிஷ்கா பெர்னாண்டோ 40, குசால் மெண்டிஸ் 30, துணித் வெல்லலாகே 39, கமிண்டு மெண்டிஸ் 40 ரன்கள் எடுத்து கை கொடுத்தனர்.

- Advertisement -

கலகலப்பான தருணங்கள்:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். முன்னதாக கடந்த போட்டியில் ஒருமுறை ரிவியூ எடுக்க உதவுமாறு வாஷிங்டன் சுந்தர் கேட்ட போது “அனைத்துமே நானே செய்து கொடுக்கட்டுமா” என்று அவரிடம் கேப்டன் ரோகித் சர்மா கோபித்துக் கொண்டார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 33வது ஓவரை வீசினார்.

இருப்பினும் அந்த ஓவரின் 2வது பந்தை வீசுவதற்காக ஓடிய அவர் கையில் இருந்து விடுவதற்கு முன் நிறுத்தினார். அப்போது முதல் ஸ்லிப் பகுதியில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா “என்ன தம்பி என்ன ஆச்சு” என்ற ரியாக்சன் கொடுத்தார். இருப்பினும் தம்முடைய கையில் பந்து வழுக்குவது போல் உணர்ந்ததால் வீசுவதை நிறுத்திய சுந்தர் மீண்டும் பந்து வீசச் சென்றார்.

- Advertisement -

ஆனால் மீண்டும் ஓடி வந்த அவர் கடைசி நொடியில் பந்து வீசாமல் நிறுத்தி விட்டு தரையில் தன்னுடைய கையை தேய்த்து ஈரப்பதத்தை போக்கினார். மறுபுறம் அவரது செய்கையால் கடுப்பான ரோஹித் சர்மா சிரித்துக்கொண்டே முதல் ஸ்லிப் பகுதியிலிருந்து வாஷிங்டன் சுந்தரை அடிப்பதற்காக கையை ஓங்கிக்கொண்டே ஓடி வந்தார். அதைப் பார்த்த வாஷிங்டன் சுந்தர் சிரித்துக் கொண்டே பந்து வீச சென்றார். மற்றொரு தருணத்தில் அக்சர் படேல் சுழலில் இலங்கையின் சமரவிக்ரமா கேட்ச் கொடுத்தார்.

இதையும் படிங்க: மீண்டும் போராடிய இலங்கை 240 ரன்ஸ்.. அசத்திய தமிழக வீரர் சுந்தர்.. 14 வருடம் கழித்து சிராஜ் வித்யாசமான சாதனை

அதை கச்சிதமாக பிடித்த விராட் கோலி பெஞ்சில் இருந்த இளம் இந்திய வீரர் ரியான் பராக்கை பிஹூ நடனம் ஆடி கலாய்த்தார். அதாவது 2019 ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அசத்திய ரியான் பராக் ராஜஸ்தானை வெற்றி பெற வைத்த பின் தம்முடைய அசாம் மாநிலத்தில் பிரபலமான பிஹு நடனத்தை ஆடியது வைரலானது. அந்த ஆட்டத்தை இன்று ஆடிய விராட் கோலி “நீ மட்டும் தான் ஆடுவியா நானும் ஆடுவேன்” என்ற வகையில் கலாய்த்தது வைரலாகி வருகிறது.

Advertisement