ஐசிசி 2024 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முடிந்த அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடியது. அதில் ஆரம்பம் முதலே எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர் அதே போல ஒரு வீரராக வெல்லாத உலகக் கோப்பையை ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக வென்று சாம்பியனாக விடை பெற்றார்.
டிராவிட் அட்வைஸ்:
முன்னதாக இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 உலகக் கோப்பை அமெரிக்காவில் நடைபெற்றது. இருப்பினும் அங்கிருந்த நியூயார்க் பிட்ச் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன் இந்தியா விளையாடிய போட்டிகளை தவிர்த்து மற்ற போட்டிகளுக்கு அமெரிக்க ரசிகர்களிடம் வரவேற்பு காணப்படவில்லை.
அதனால் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளால் மட்டும் தங்களுக்கு சுமார் 160 – 170 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சமீபத்தில் ஐசிசி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டை வளர்க்க நினைக்கும் ஐசிசி இது போன்ற நஷ்டங்களை தியாகம் செய்ய வேண்டுமென ராகுல் டிராவிட் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பாரிசில் நடைபெறும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய குழுவுக்கு டிராவிட் ஆதரவளித்து வருகிறார்.
அங்கே அமெரிக்காவில்லை நடைபெறவிருக்கும் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட உள்ளது பற்றி டிராவிட் சொன்னது பின்வருமாறு. “வசதிகளை உருவாக்குவது கொஞ்சம் சவாலானது. ஆனால் கிரிக்கெட்டை உலக விளையாட்டாக நீங்கள் மாற்ற விரும்பினால் சில தியாகங்களை செய்ய வேண்டும். அதே சமயம் போட்டி துவங்கும் நேரத்தை பற்றியும் யோசிக்கக்கூடாது. ஒலிம்பிக் போட்டிகள் காலை 10.30 மணிக்கு துவங்குவது எனக்கு பிரச்சனையாக தெரியவில்லை”
இதையும் படிங்க: 2026, 2027 உலகக் கோப்பையுடன் 2028இல் அதையும் ஜெய்க்க இந்திய அணி ரெடியாகிட்டு வராங்க.. ராகுல் டிராவிட் பேட்டி
“ஏனெனில் நாங்கள் பொழுது போக்குக்காக இருக்கிறோம். விளையாட்டுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் அதைப் பிரச்சினையாக பார்க்க மாட்டார்கள். ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் பகலிரவு போட்டிகளில் டாஸ் முக்கிய பங்காற்றும். ஆனால் 10.30 மணிக்கு துவங்கும் போட்டியில் அந்த பிரச்சனை கிடையாது. ஏனெனில் அந்த சூழ்நிலை 2 அணிகளுக்கும் சமமானதாக இருக்கும்” என்று கூறினார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் நடத்தி கிரிக்கெட்டை அங்குள்ள ரசிகர்களுக்கு காண்பிக்க பெரிய முயற்சிகளை எடுத்த ஐசிசிக்கு டிராவிட் பாராட்டும் தெரிவித்தார்.



