வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் ரோகித் சர்மா தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது மொத்த ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
அந்த வெற்றியுடன் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதாக அறிவித்தனர். குறிப்பாக கடந்த 10 வருடங்களாக இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் விடை பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் 35 வயதை கடந்து விட்டதால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழி விட்டு அவர்கள் ஓய்வு பெற்றனர்.
இவ்ளோ தானா:
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிடம் உள்ள திறமைக்கு கடந்த 10 வருடங்களில் குறைந்தது 2 உலகக் கோப்பைகளை வென்றிருக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2007இல் டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா 17 வருடங்கள் கழித்து மிகவும் போராடி 2வது கோப்பையை வென்றதாக அவர் மறைமுகமாக கிண்டலடித்துள்ளார்.
அதே சமயம் உலகக் கோப்பையை வென்ற இந்த தருணத்தை விட ஓய்வு பெறுவதற்கு நல்ல நேரம் கிடைக்காது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “விடை பெறுவதற்கு இது சரியான நேரம் என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் இன்னும் நிறைய வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்று விடை பெற்றிருக்க வேண்டும்”
“குறிப்பாக ரோஹித் சர்மா தன்னுடைய கையில் மற்றொரு உலகக் கோப்பையை தூக்க 17 வருடங்களை எடுத்துக் கொண்டார். எனவே இன்னும் ஒன்று அல்லது 2 உலகக் கோப்பைகளை வென்றிருக்க வேண்டும் என்பதை ரோகித் சர்மா முதல் ஆளாக ஒப்புக்கொள்வார். அதே சமயம் பார்படாஸ் நகரில் உங்களுடைய கையில் கோப்பை இருந்த போது ஓய்வு பெற்றதை விட வேறு நல்ல தருணம் இருக்க முடியாது”
இதையும் படிங்க: 1971 விதிமுறை தெரியாமல் தேசியக் கொடியை அவமானப் படுத்திய ரோஹித் சர்மா? அறிவுறுத்தம் ரசிகர்கள்
“தற்போது அவர்கள் மகிழ்ச்சியாக உட்கார்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கொஞ்சம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் எம்எஸ் தோனி போல ஐபிஎல் தொடரில் விளையாடலாம். இந்திய கிரிக்கெட்டில் அவர்களுடைய இடத்தை நிரப்புவதற்கு நிறைய திறமைகள் இருக்கிறது” என்று கூறினார். இதைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட உள்ளனர்.



