ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 20ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறும் சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. அதில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் தோற்றதில்லை. எனவே இம்முறையும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சமீப காலங்களில் மிகப்பெரிய எழுச்சி கண்டுள்ள ஆப்கானிஸ்தான் 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்தது. அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கே சவாலை கொடுக்கக்கூடிய நியூசிலாந்தை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே இப்போட்டியில் இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய சவாலை கொடுத்து வெற்றிக்கு போராட தயாராகியுள்ளது.
எல்லாருக்கும் அடி:
இந்நிலையில் இந்திய அணியின் முதன்மை பவுலரான ஜஸ்பிரீத் பும்ரா மட்டுமின்றி தம்முடைய இடத்தில் யார் போட்டாலும் அடிப்பேன் என்று ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் சாம்பியன் அணியை போன்ற மனநிலையுடன் ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கும் அவர் இந்த உலகக் கோப்பையின் ஃபைனலில் விளையாடுவதே தங்களுடைய லட்சியம் என்று கூறியுள்ளார்.
இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “உண்மையில் பும்ரா மட்டும் என்னுடைய இலக்கு கிடையாது. பும்ராவை தாண்டி நான் அனைத்து பவுலர்களையும் டார்கெட் செய்வேன். ஏனெனில் 5 பவுலர்கள் பந்து வீசுவார்கள். நான் அவர்கள் அனைவரையும் எதிர்கொள்வேன். பும்ராவை தாண்டி வேறு ஏதேனும் பவுலர் கூட என்னை அவுட்டாக்கலாம். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய இடத்தில் பந்து வீசினால் பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் போன்ற யாரை வேண்டுமானாலும் அடிப்பேன்”
“ஒன்று அவுட்டாவேன் அல்லது அவர்களை நான் அடிப்பேன். இதற்கு முன் உலகக் கோப்பைகளில் விளையாடிய நாங்கள் இப்போதும் விளையாடுகிறோம். இதற்கு முன் உலகக் கோப்பையில் விளையாடினால் போதும் என்று நாங்கள் நினைப்போம். ஆனால் இம்முறை நாம் சாம்பியனாக செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய மிகப்பெரிய மனநிலையாகும்”
இதையும் படிங்க: மிராக்கிள் கம்பேக் கொடுத்து சூப்பர்மேன்னு நிரூப்பிச்சுட்டாரு.. ஸ்பெஷலான இந்திய வீரரை பாராட்டிய வாசிம் அக்ரம்
“நாங்கள் சாம்பியனாக சாதனை படைப்பதில் எந்த அழுத்தமும் கிடையாது. எங்கள் மீது எதிர்பார்ப்புகளும் கிடையாது. நாங்கள் ஒரு சமயத்தில் ஒரு போட்டியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் முதலில் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று பின்னர் ஃபைனலில் விளையாடுவோம் என்ற எங்களுடைய லட்சியத்தை அடைவோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



