ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எளிதாக தோற்கடித்தது. அதை தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் இந்தியா தங்களுடைய இரண்டாவது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஏனெனில் 2021 துபாய் தோல்வியை தவிர்த்து டி20 உலகக் கோப்பைகளில் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி கண்டுள்ளது. மறுபுறம் சமீபத்தில் அயர்லாந்திடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அமெரிக்காவிடம் முதல் முறையாக தோற்றது. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அந்த அணி இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன் வரும் என்று நம்பப்படுகிறது.
பாண்டியாவின் வரலாறு:
இருப்பினும் விராட் கோலி போன்ற பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் அசத்தலாக விளையாடி நல்ல ஃபார்மில் இருப்பதால் இம்முறையும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சண்டையிட போவதில்லை ஆனால் வரலாறு படைக்கப் போவதாக இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
எனவே ரசிகர்கள் தங்களுடைய மூச்சை பிடித்துக் கொண்டு ஆர்வத்துடன் இப்போட்டியை கண்டு களிக்குமாறு தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது போன்ற பெரிய போட்டியில் நிற்பது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதை நான் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலான போட்டியாக பார்க்கிறேன். அதிர்ஷ்டவசமாக பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய போட்டிகளில் நான் நன்றாக செயல்பட்டுள்ளேன்”
“எனவே உங்களுடைய மூச்சை பிடித்துக் கொள்ளுங்கள். இது என்னுடைய கோரிக்கை. இது சண்டை கிடையாது. இது வரலாறு மாறப்போகிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போதுமே ஆர்வம் மிகுந்ததாகவும் அதிகப்படியான ஆதரவை பெறுவதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருக்கும். அதே சமயம் அந்தப் போட்டியில் கட்டுக்கோப்புடன் அணியாக செயல்பட்டு வெற்றி வேட்டையை நிகழ்த்துவோம் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க: ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம்.. சீக்கிரம் மாத்துறோம்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு கேரண்டி கொடுத்த ஐசிசி
“அதை நாங்கள் செய்யும் பட்சத்தில் அது எங்களுக்கு மற்றுமொரு நல்ல நாளாக அமையும்” என்று பிசிசிஐ இணையத்தில் பேசினார். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 11 விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சில் அசத்தியுள்ளார். ஆனால் பேட்டிங்கில் வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்து சுமாராகவே செயல்பட்டுள்ளார். அந்த நிலையில் இம்முறை பாண்டியா எப்படி அசத்துகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



