ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய பயிற்சி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் இந்திய அணிக்கு சில தெளிவுகள் கிடைத்தது என்றே சொல்லலாம். முதலாவதாக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா 2024 ஐபிஎல் தொடரில் பேட்டிங், பவுலிங் ஆகிய எதிலுமே தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாரான ஃபார்மில் இருந்தார்.
ஆனால் பயிற்சிப் போட்டியில் 40* ரன்கள் அதிரடியாக எடுத்த அவர் ஒரு விக்கெட்டும் எடுத்து தன்னுடைய தரத்தை நிரூபித்தார். அதே போல ஐபிஎல் தொடரில் பந்து வீசாத சிவம் துபே அப்போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். எனவே அந்த இருவரும் ஆல் ரவுண்டர்களாக விளையாடுவது உறுதியாகியுள்ளது.
கவாஸ்கர் தேர்வு:
மறுபுறம் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே ஐபிஎல் தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற குழப்பமும் காணப்பட்டது. ஆனால் இந்த பயிற்சி போட்டியில் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டான நிலையில் ரிஷப் பண்ட் 53* ரன்கள் அடித்து அசத்தினார். எனவே ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடுவதும் உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியை தாண்டி ஐபிஎல் தொடரின் கடைசிப் பகுதியிலும் சஞ்சு சாம்சன் அசத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே உலகக் கோப்பை போட்டிகளில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விக்கெட் கீப்பிங் திறமையை ஒப்பிட்டு பார்க்கும் போது சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட் சிறந்தவராக இருக்கிறார்”
“இங்கே நாம் பேட்டிங்கை பற்றி பேசவில்லை. இந்த விவாதத்தில் பேட்டிங் திறமையும் வரும். அது போன்ற சூழ்நிலையில் கடந்த சில போட்டிகளாக ரிஷப் பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்தார். மறுபுறம் சஞ்சு சாம்சன் அனைத்து திசைகளிலும் அடித்து பெரிய ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரை சிறப்பாக துவங்கினார். ஆனால் கடைசி 2 – 3 போட்டிகளில் அவர் ரன்களை அடிக்கவில்லை”
இதையும் படிங்க: என்ன ஆனாலும் அதை மாற்றமாட்டோம்.. கனடாவை வீழ்த்திய பின் இந்தியா – பாகிஸ்தானுக்கு சவால்விட்ட அமெரிக்க கேப்டன்
“எனவே வங்கதேசத்துக்கு எதிராக அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை அவர் அந்த வாய்ப்பில் 50 – 60 ரன்கள் அடித்திருந்தால் எந்த கேள்வியும் இருந்திருக்காது. ஆனால் தற்போது இந்திய தேர்வுக்குழு ரிஷப் பண்ட்டை விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுப்பார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ரிஷப் பண்ட் கீப்பராக விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



