ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் இரண்டாம் தேதி அமெரிக்காவில் துவங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக இவ்விடம் அணிகளும் இருதரப்பு தொடர்களில் மோதுவதில்லை.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் 2012க்குப்பின் 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. அதனால் இப்போதெல்லாம் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனாலயே அந்தப் போட்டியின் மதிப்பு தற்போது பன்மடங்கு எகிறியுள்ளது.
ஐசிசியின் திட்டம்:
மறுபுறம் இதை நன்றாக உணர்ந்த ஐசிசி அதை வைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஒவ்வொரு தொடரிலும் ஒரே பிரிவில் இணைத்து அட்டவணையை உருவாக்குகிறது. அதனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டி 100% உறுதியாக நடைபெறுவதால் அதை வைத்து ஐசிசிக்கு வருமானம் இரட்டிப்பாக கிடைக்கிறது.
ஒருவேளை இரு அணிகளுமே நன்றாக விளையாடினால் நாக் அவுட் சுற்றில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் வகையில் ஐசிசி அட்டவணையை உருவாக்குகிறது. இந்நிலையில் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்படியாவது 2 முறை நடக்கும் வகையில் ஐசிசி அட்டவணையை உருவாக்குவதாக முன்னாள் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார்.
அது தற்போது கொஞ்சம் சுமாரான ஃபார்மில் இருக்கும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை சமாளிக்க பாபர் அசாம் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பையில் ஐசிசி இந்தியா – பாகிஸ்தான் 2 போட்டிகளில் மோதுவதை ஐசிசி விரும்புகிறது. இவ்விரு அணிகளும் நாக் அவுட் சுற்றிலும் மோதும் வகையில் அவர்கள் அட்டவணையை உருவாக்குகின்றனர்”
இதையும் படிங்க: விராட் கோலி மோசமா திட்டுவாரு.. பாண்டியா, ரோஹித் செய்த ஸ்லெட்ஜிங் பற்றி மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
“தற்போது அனைத்தும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. பாகிஸ்தான் தற்போது கொஞ்சம் குறைவான ஃபார்மில் உள்ளனர். மறுபுறம் ஐபிஎல் தொடரில் விளையாடிய இந்தியா நல்ல வடிவத்தில் இருக்கிறது. எனவே பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுவதற்கு பாபர் அசாம் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும்” என்று கூறினார். இந்த நிலையில் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.



