இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து மேலும் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என்று டிராவிட் அறிவித்து விட்டதால் அவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்காரணமாக ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பிசிசிஐ ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக அடுத்த புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான பணிகளை தற்போது மும்முரப்படுத்தியுள்ளது. அதோடு அதற்கான ஆயுத்த பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி மே 27-ஆம் தேதி வரை புதிய பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. அந்த வகையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான பதவிக்கு பல்வேறு முன்னாள் வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வேளையில் பெரும்பாலும் இந்த பதவிக்கு ஸ்டீபன் பிளமிங், கௌதம் கம்பீர், வி.வி.எஸ் லக்ஷ்மணன் போன்ற ஒரு சிலருக்கு தான் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கான அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் பெயர்களில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழுவினர் குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் போன்ற பெயர்களில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் குழம்பியுள்ளது.
இதையும் படிங்க : குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட க்ருனால் பாண்டியா – நட்டாஷா கொடுத்த செம ரிப்ளை
மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில் இதில் எது உண்மையான விண்ணப்பம் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூகுள் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அதிகளவில் போலி விண்ணப்பங்கள் இதுபோன்று வந்து குவிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



