ஐபிஎல் 2023 சீசனில் வார்னர் இல்லாமல் சாதிக்குமா ஹைதெராபாத் – தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியல்

PBKS vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கிய 10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. ஆரம்ப காலம் முதல் அதிரடியாக பேட்டிங் செய்து 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்று 2016இல் முதலும் கடைசியுமாக கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை 2021இல் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக பாதியில் கழற்றிவிட்ட அந்த அணி நிர்வாகம் கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்தது. அவரின் தலைமையில் ஆரம்பத்திலேயே 2 தோல்விகளை சந்தித்த அந்த அணி கடைசி இடத்தை பிடித்தாலும் அதன்பின் 5 தொடர் வெற்றிகளால் டாப் 4 இடத்துக்குள் நுழைந்தது.

இருப்பினும் அதன்பின் 5 தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி மொத்தம் 14 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டும் பெற்று 8-வது இடத்தை மட்டுமே பிடித்தது. அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கேன் வில்லியம்சன் பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டதை போல இதர வீரர்களும் சுமாராக செயல்பட்டனர். மொத்தத்தில் டேவிட் வார்னர் இல்லாமல் நாக்-அவுட் சுற்றை கூட எட்டிப்பார்க்க முடியாத அந்த அணி மீண்டும் அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கு போராட உள்ளது. அதற்காக இம்முறை சிறப்பாக செயல்பட்டதால் தக்க வைக்க வேண்டிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. அபிஷேக் சர்மா: 6.50 கோடிக்கு இவர் வாங்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தாலும் பெரும்பாலான போட்டிகளில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

மொத்தம் 14 போட்டிகளில் 426 ரன்களை 30 என்ற சராசரியில் 133 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து வாங்கிய சம்பளத்திற்கும் சிறப்பாக செயல்பட்டார். எனவே வருங்காலத்தை கருத்தில்கொண்டு ஹைதராபாத் தக்கவைக்க வேண்டிய வீரராக இவர் தன்னை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

2. கேன் வில்லியம்சன்: இவரைப் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒருவர் இப்பட்டியலில் முதலிடத்தில் எழுத முடியாத அளவுக்கு இந்த வருடம் மோசமாக செயல்பட்டது மனதிற்கு வேதனையாகும். ஆம் வார்னரின் இடத்தில் பொறுப்புடன் விளையாட வேண்டிய இவர் 13 போட்டிகளில் வெறும் 216 ரன்களை இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய அத்தனை பேட்ஸ்மேன்களை காட்டிலும் மிகக்குறைவாக 93.32 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியது நிறைய தோல்விகளை பரிசளித்தது.

அதனால் 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இவருக்காக வார்னரை விடுவிட்டோமே என்று ஹைதராபாத் வருந்தும் அளவுக்கு இவர் மோசமாக செயல்பட்டார். மேலும் கடந்த வருடம் ஏற்பட்ட “எல்போ காயம்” இவரின் பேட்டிங்கை பாதித்ததாக தெரிகிறது. எனவே அடுத்த வருடம் இவருக்கு மீண்டும் ஒருமுறை கடைசியாக தக்கவைத்து ஐதராபாத் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

3. உம்ரான் மாலிக்: கடந்த வருடம் ஒருசில போட்டிகளில் அசத்தியதற்காக 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட இவர் இந்த வருடம் 14 போட்டிகளில் அசுர வேக பந்துகளால் பேட்ஸ்மென்கள் திணற்டித்து 22 விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டார்.

மேலும் 22 வயதிலேயே 150 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசி ஜாம்பவான்களின் பாராட்டை அள்ளி இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ள இவர் வருங்காலத்தில் இன்னும் சிறப்பாக பந்து வீசுவார் என்பதால் இவரை ஹைதராபாத் வெளிவிடாமல் தக்கவைக்க வேண்டும்.

- Advertisement -

4. ராகுல் திரிபாதி: 8.50 கோடிக்கு 14 போட்டிகளில் 413 ரன்களை 37.55 என்ற நல்ல சராசரியில் 158.24 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் குவித்த இவர் கடந்த சில வருடங்களாகவே நல்ல ரன்களை அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்தியாவுக்கு விளையாடாத வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியில் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்ட இவரை அடுத்த வருடம் ஹைதராபாத் தாராளமாக தக்க வைக்கலாம்.

5. புவனேஸ்வர் குமார்: 4.20 கோடிக்கு மீண்டும் வாங்கப்பட்ட இவர் இந்த வருடம் 14 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 7.34 என்ற நல்ல எக்கனாமியில் பந்துவீசி அனுபவத்தை காட்டினார். ஹைதராபாத் வேகப்பந்து வீச்சில் இவரை மீண்டும் முதன்மை பவுலராக சந்தேகமின்றி தக்க வைக்க வேண்டும்.

6. நடராஜன்: ஹைதராபாத் அணிக்காக விளையாடி இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்த தமிழகத்தின் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் இவர் இந்த வருடம் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை எடுத்தாலும் கடைசி சில போட்டிகளில் ரன்களை வாரி வழங்கினார்.

அதனால் 9.44 என இவரின் எக்கனாமி எகிறியுள்ளதால் அடுத்த வருடம் லைன், லென்த் போன்ற அம்சங்களில் இவர் உழைக்க வேண்டியுள்ளது. இருப்பினும் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் இவரை மீண்டும் அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கும் என நம்பலாம்.

சந்தேக பட்டியல்:
1. வாசிங்டன் சுந்தர்: 8.75 கோடிக்கு வாங்கப்பட்டு காயத்தால் முழுமையான வாய்ப்பு பெறாத இவர் பங்கேற்ற 9 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை 8.54 என்ற ஓரளவு நல்ல எக்கனாமியில் எடுத்தார்.

எனவே அடுத்த வருடம் சற்று குறைவான தொகையில் வாங்கி இவருக்கு மீண்டும் முழுமையான வாய்ப்பளித்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்.

2. ஐடன் மார்க்ரம்: 2.60 கோடிக்கு பங்கேற்ற 14 போட்டிகளில் 381 ரன்களை 47.63 என்ற நல்ல சராசரியில் எடுத்த இவர் மிடில் ஆர்டரில் சிறப்பாகவே செயல்பட்டார். அதேபோல் பந்துவீச்சிலும் 1 விக்கெட் எடுத்த இவரையும் அடுத்த வருடம் ஹைதராபாத் தக்க வைத்து மீண்டும் வாய்ப்பளிக்கலாம்.

Advertisement