இந்திய அணி வீரர்கள் தற்போது ஃபிட்னஸ் செயல்பாடுகளில் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். மேலும் கேப்டன் விராட்கோலி இந்திய அணியை வழிநடத்திச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து பிட்னஸ்க்கு இந்திய அணி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வீரர்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு இந்த ஃபிட்னஸ் நிச்சயம் அவசியம் என்று கோலி கருதுகிறார்.

அவர் கேப்டனாக மாறியதிலிருந்து யோ – யோ தேர்வு நடைபெற்று அதன் பின்னரே வீரர்கள் அணிக்கு தேர்வு செய்து வருகின்றனர். மேலும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறும் வீரர்கள் மட்டுமே இந்திய அணியில் விளையாட முடியும் என்றும் ஒரு புதிய விதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அடுத்த கட்டமாக சென்றுள்ள பிசிசிஐ 8 நிமிடம் 30 நொடிகளுக்குள் 2 கிலோ மீட்டர் ஓட வேண்டும் என்ற ஒரு சோதனையை வீரர்களிடையே அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆட இருக்கிறது. இதற்கு முன்னர் இந்திய அணிக்கு தகுதி பெறுவதற்காக 20 வீரர்களுக்கு யோயோ டெஸ்ட் மற்றும் ரன்னிங் டெஸ்ட் ஆகியவை செய்யப்பட்டது. பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் நடைபெற்ற இந்த தேர்வில் 20 வீரர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர்.

இந்த சோதனையில் பாஸ்ட் பவுலர்கள் 8 நிமிடம் 15 நொடிகளில் இரண்டு கிலோ மீட்டர் ஓடி முடிக்க வேண்டும். அதே நேரம் மற்ற வீரர்கள் 8 நிமிடம் 30 நொடிகளில் இரண்டு கிலோ மீட்டர் ஓடி முடிக்க வேண்டும். அந்த சோதனை தற்போது பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் நடைபெற்றது.

தற்போது நடைபெற்று முடிக்கப்பட்ட இந்த இரண்டு கிலோ மீட்டர் ரன்னிங் சோதனையில் இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் ஸ்பின் பவுலர் ராகுல் திவாதியா இடதுகை அதிரடி ஆட்டக்காரர் நித்திஷ் ராணா மற்றும் பாஸ்ட் பவுலர் சித்தார்த் கவுல் மற்றும் உனட்கட் ஆகியோர் தேர்ச்சி அடையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



