- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உ.கோ இடத்தை பிடிக்க ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள 5 வீரர்கள்

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தயாராகி வரும் இந்தியா அடுத்ததாக ஆகஸ்ட் 27இல் துபாயில் துவங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த வருடம் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் அந்த தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார்.

அதுபோக சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா போன்ற சமீபத்திய தொடர்களில் அசத்திய அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பையில் அணியில் விளையாடப்போகும் உத்தேச வீரர்களை ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடைபெற்று வரும் தொடர்களிலிருந்து இந்திய அணி நிர்வாகம் தேர்ந்தெடுத்து வருகிறது.

- Advertisement -

கட்டாய செயல்பாடுகள்:
இருப்பினும் இந்த ஆசிய கோப்பையில் இருந்து தான் இறுதிக்கட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே சமீபத்திய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இறுதியான வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் உள்ள வீரர்களைப் பற்றி பார்ப்போம்:

5. ஆவேஷ் கான்: சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன்களை வாரி வழங்கிய போதிலும் ஒருசில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதாலும் இளம் வீரராக இருப்பதாலும் முகமத் ஷமிக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் இந்த ஆசிய கோப்பையில் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே டி20 உலகக் கோப்பையில் பேக்-அப் வீரராக விளையாடும் வாய்ப்பையாவது பெறலாம்.

- Advertisement -

ஏனென்றால் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் அணிக்கு திரும்பும் போது ஏற்கனவே புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் ஆகியோர் நிலையான இடத்தைப் பிடித்துள்ளதால் இவருக்கு இடம் கிடைக்காது. ஒருவேளை இவர் சிறப்பாக செயல்படத் தவறினால் டி20 உலகக் கோப்பை மட்டுமல்லாது அதன்பின் எந்த தொடரிலும் தேர்வாகாமல் போகவும் வாய்ப்புள்ளது.

4. ரவி பிஷ்னோய்: சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆல்-ரவுண்டராக அசத்திய அக்சர் படேலுக்கு பதில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும் அறிமுகமானது முதல் வாய்ப்பு பெற்ற அத்தனை போட்டிகளிலும் அசத்தலாக செயல்பட்ட காரணத்தால் இந்த ஆசிய கோப்பை தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் இந்த வாய்ப்பை பொன்னாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இதில் சுமாராக செயல்படும் பட்சத்தில் கணிசமான பேட்டிங் தெரிந்த அக்சர் பட்டேலுக்கு உலக கோப்பையை வாய்ப்பு கிடைத்துவிடும். மேலும் சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக ரவிச்சந்திரன், அஸ்வின் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இவருக்கு போட்டியாக உள்ளனர்.

3. ரவிச்சந்திரன் அஷ்வின்: 2017க்குப்பின் மொத்தமாக கழற்றிவிடப்பட்ட இவரின் வெள்ளை பந்து கிரிக்கெட் கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்த வேளையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் 2021 டி20 உலகக் கோப்பையில் நேரடியாக 4 வருடங்கள் கழித்து தேர்வாகி கம்பேக் கொடுத்தார். அப்போது முதல் இப்போது வரை கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் ரன்களை வாரி வழங்காமல் நல்ல எக்கனாமியில் பந்து வீசினாலும் கேப்டனுக்கு விக்கெட் தேவைப்படும் போது விக்கெட் எடுக்கும் பவுலராக இவர் இருப்பதில்லை என்பதே ஒரே ஒரு குறையாகும்.

- Advertisement -

இருப்பினும் முன்பைவிட பேட்டிங்கில் நிறைய முன்னேறியுள்ள இவருக்கு போட்டியாக ரவீந்திர ஜடேஜா, சஹால் ஆகியோர் இருப்பதால் இந்த ஆசிய கோப்பையில் சுழல் பந்துவீச்சாளராக அசத்தி நிறைய விக்கெட்டுகளை எடுத்தால் தான் இவருக்கு மீண்டும் உலக கோப்பை வாய்ப்பு கிடைக்கும்.

2. தீபக் ஹூடா: கடந்த பிப்ரவரியில் அறிமுகமாகி ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ அணியில் அசத்திய இவர் சமீபத்தில் அயர்லாந்து தொடரில் சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கிடைத்த வாய்ப்பில் அசத்தலாக செயல்பட்டுள்ளார். சஹால் போன்ற முதன்மை சுழல்பந்து வீச்சாளருக்கு ஈடாக பந்துவீசும் திறமையும் பெற்றுள்ள இவர் அதன் காரணமாகவே இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் வருவதால் பெஞ்சில் அமரப்போகும் இவர் ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் அதில் மீண்டும் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்போது தான் விராட் கோலி இருந்தாலுமே டி20 உலக கோப்பையில் இவர் பேக்-அப் வீரராக தேர்வாகி யாரேனும் காயமடைந்தால் நேரடி அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

1. தினேஷ் கார்த்திக்: ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்ததால் கதை முடிந்தது என்று கருதப்பட்ட இவர் 2022 டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் கடினமாக பயிற்சிகளை எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் 183.33 என்று அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியதால் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ளார். அதில் தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய இவர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சுமாராகவே செயல்பட்டார். மேலும் 37 வயது கடந்த இவர் ரிஷப் பண்ட், ராகுல் ஆகிய விக்கெட் கீப்பிங் செய்யும் வீரர்கள் இருப்பதால் பினிஷிங் செய்யும் வேலைக்காக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அந்த வேலையை செய்வார்கள் என்பதால் இவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்ற கருத்துக்கள் வெளிவருகின்றன. எனவே டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்ற லட்சியத்தில் பாதி தூரத்தை கடந்துள்ள இவர் இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு அந்த விமர்சனங்களை உடைத்தால் மட்டுமே இறுதிக்கட்ட அணியில் தேர்வாக முடியும்.

- Advertisement -
Published by