மகத்தான கேப்டன் தோனி தலைமையில் நல்ல வாய்ப்புகளை பெற்று ஜொலிக்க தவறிய 6 வீரர்களின் பட்டியல்

Binny
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி வரலாற்றில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக போற்றப்படுகிறார். முதலில் ஒரு விக்கெட் கீப்பராக கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்யும் திறமை பெற்ற அவர் அதிரடியாக பேட்டிங் செய்து இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக இல்லாமல் ரன்களும் குவிக்க வேண்டும் என்ற அடிப்படையான இலக்கணத்தை மாற்றியமைத்தவர். அதேபோல் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிகரமாக பினிஷிங் செய்யும் பினிஷராகவும் போற்றப்படும் அவர் அனுபவம் இல்லாத நிலையில் கேப்டன்ஷிப் பொறுப்பேற்று சீனியர் ஜூனியர் என அனைத்து வீரர்களையும் ஒன்றிணைத்து 2007, 2011, 2013 ஆகிய வருடங்களில் 3 வெவ்வேறு உலக கோப்பைகளை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர்.

Trophies Won By MS Dhoni

- Advertisement -

மேலும் தரமான இளம் வீரர்களின் திறமையை உணர்ந்து ஆரம்பத்தில் தடுமாறினாலும் விமர்சனத்திற்கு அஞ்சாமல் அவர்களுக்கு தேவையான ஆதரவையும் வாய்ப்பையும் அளித்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக ஜொலிக்கச் செய்யும் தலைவராகவும் போற்றப்படுபவர். சொல்லப்போனால் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஷிகர் தவான், அஸ்வின், ஷமி, புஜாரா, ராகனே, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் என தற்போதைய இந்திய அணியில் விளையாடும் கிட்டத்தட்ட 70% க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஆரம்ப காலங்களில் தேவையான வாய்ப்புகளை கொடுத்து இன்றைய இந்திய அணியின் வளமான வருங்காலத்தை அப்போதே சிறப்பாக கட்டமைத்தவர்.

ஜொலிக்க தவறியவர்கள்:
அதை விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பல முறை அவர்களே கூறியுள்ளார்கள். அந்த வகையில் அவரது தலைமையில் விளையாட அனைத்து வீரர்களும் மிகவும் ஆசைப்படுவார்கள். அதனால் அவரது தலைமையில் வாய்ப்பு பெற்ற 70% வீரர்கள் நாளடைவில் மிகச்சிறந்த சாம்பியன் வீரர்களாக உருவெடுத்துள்ளார்கள்.

dhoni

மேலும் என்னதான் தோனி வாய்ப்பு கொடுத்தாலும் 10இல் 7 போட்டிகளுக்கு பின்பு மிகச்சிறப்பாகச் செயல்பட்டால்தான் நட்சத்திரங்களாக உருவெடுக்க முடியும். அந்த வகையில் தோனியின் தலைமையில் வாய்ப்பு பெற்று ஆரம்ப கட்டத்தில் தரமான வீரர்களாக வருவோம் என்ற நம்பிக்கையை காட்டிய சில வீரர்கள் நாளடைவில் சிறப்பாக செயல்பட தவறி நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியாமல் காணாமல் போயுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. மோஹித் சர்மா: ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ஊதா தொப்பியை வெல்லும் அளவுக்கு ஒரு கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு 2015 உலககோப்பை அணியில் தோனி வாய்ப்பு கொடுத்தார்.

mohit

அதில் ஆரம்பத்தில் அசத்தலாக செயல்பட்ட இவர் முகமது சமி, புவனேஸ்வர் குமார் போன்ற இதர வேகப்பந்து வீச்சாளர்களை போல் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதால் வாய்ப்புகளை இழந்தார். மொத்தமாக 30 போட்டியில் 34 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த அவர் கடைசியாக 2015இல் விளையாடி ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்டதால் தற்போது நெட் பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

5. பிரவீன் குமார்: அதிகப்படியான வேகத்தில் பந்து வீச முடியவில்லை என்றாலும் ஸ்விங் செய்யும் திறமையுடன் விவேகமாக பந்து வீசிய இவர் தோனி தலைமையில் கடந்த 2008இல் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் வாய்ப்பு பெற்று 2 இறுதிப் போட்டிகளிலும் ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற ஜாம்பவான்களை அவுட் செய்து இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

praveen kumar 1

அதனால் 2011 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்ற இவர் கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதால் ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டார். அதன்பின் முன்புபோல் செயல்பட முடியாமல் தவித்த அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் கடைசியாக 2012 ஆசிய கோப்பையில் விளையாடி மொத்தமாக 68 ஒருநாள் போட்டிகளில் 72 விக்கெட்டுகளை எடுத்து 2018ல் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

4. மனோஜ் திவாரி: தோனி தலைமையில் வாய்ப்பு பெற்ற இவர் கடந்த 2011 உலக கோப்பை வென்ற பின் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சென்னையில் சதமடித்தார். இருப்பினும் அந்த தொடர் முடிந்ததும் வீரேந்திர சேவாக் போன்ற உலக கோப்பை வென்ற நட்சத்திரங்கள் அணிக்கு திரும்பியதால் வாய்ப்பை இழந்த அவர் அடுத்த வருடம் இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் வாய்ப்பு பெற்று 65 ரன்கள் குவித்தார்.

Manoj-Tiwary

அதன்பின் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் அணியில் விளையாடியதால் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற தவறிய அவர் அந்த 2 போட்டிகளை தவிர்த்து எஞ்சிய போட்டிகளிலும் சுமாரான ரன்களையே எடுத்தார். மொத்தமாக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் முறையே 287 மற்றும் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். அதனாலேயே ஐபிஎல் தொடரிலும் காணாமல் போன அவர் தற்போது மேற்கு வங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக செயல்படுவதுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார்.

3. வருண் ஆரோன்: தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டை சேர்ந்த இவர் அவரது தலைமையில் கடந்த 2011இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதிரடியான வேகத்தில் பந்து வீசினார். ஆனால் வேகத்தை மட்டுமே நம்பியிருந்த அவர் நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க முடியாத அளவுக்கு ரன்களை வாரி வழங்கினார்.

கடைசியாக கடந்த 2014இல் விளையாடிய அவர் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். தற்போது 32 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்திய அணிக்கு திரும்ப முடியாத அளவுக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் இன்னும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

2. ஸ்டுவர்ட் பின்னி: முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பின்னியின் மகனான இவர் எம்எஸ் தோனி தலைமையில் 2014 வாக்கில் 3 வகையான அணியிலும் அறிமுகமானார். குறிப்பாக மிர்பூரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக சாதனை படைத்த அவர் 2015இல் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 75 ரன்கள் குவித்து ஒரு நல்ல வேகப்பந்து ஆல்-ரவுண்டராக தோற்றமளித்தார்.

Binny 1

ஆனால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறிய அவர் 2016இல் ஹர்திக் பாண்டியா அறிமுகமானதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். மொத்தமாக 23 போட்டிகளில் பங்கேற்ற அவர் 500க்கும் குறைவான ரன்களையும் 25க்கும் குறைவான விக்கெட்டுகளை தான் எடுத்தார்.

1. யூசுப் பதான்: கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் அறிமுகமாகி முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இவர் 2010இல் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியில் 123* (96) ரன்களை விளாசி 316 ரன்களை சேசிங் செய்ய உதவியதால் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

Yusuf 2

அதே வருடம் தென்னாப்பிரிக்க மண்ணில் 105* (70) ரன்களை விளாசி அந்த அணியை தெறிக்கவிடும் அளவுக்கு பேட்டிங் செய்த இவர் 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். அப்படி 2 உலகக் கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்ற அவருக்கு தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறியதால் 2012 ஆசிய கோப்பைக்கு பின் வாய்ப்பு கிடைக்கவில்லை. மொத்தமாக 57 ஒருநாள் போட்டிகளில் 810 ரன்களையும் 22 டி20 போட்டிகளில் 236 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Advertisement