2023இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக பிரகாசமான வாய்ப்புள்ள 5 தரமான இந்திய வீரர்கள்

Sarfaraz-khan-2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முக்கிய அணியாக இந்தியா கொடி கட்டி பறப்பதற்கு அதில் விளையாடும் தரமான கிரிக்கெட் வீரர்கள் முக்கிய காரணமாக அமைந்து வருகிறார்கள். அதில் ஏற்கனவே நிறைய வீரர்கள் தங்களது அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நிலையான இடத்தை பிடித்திருந்தாலும் வயது மற்றும் சுமாரான பார்ம் காரணமாக ஒரு கட்டத்தில் அணியிலிருந்து வெளியேற வேண்டியது கட்டாயமாகிறது. ஆனால் திடீரென்று அவர்கள் இல்லாத சூழ்நிலையை சமாளிக்க முடியாது என்பதால் அவர்கள் இருக்கும் போதே அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளித்து கண்டறிவது அனைத்து அணிகளிலும் நடைபெறும் இயல்பான ஒன்றாகும்.

அந்த வாய்ப்புகளை பிடிக்க விரும்பும் வீரர்கள் முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர்ந்து தேர்வுக்குழுவின் கதவை தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வகையில் சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் 2023இல் ஆண்டில் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமாவார்கள் என்று கருதப்படும் சில இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ராகுல் திரிபாதி: உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சமீப காலங்களாகவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் இவர் 2022 ஐபிஎல் சீசனில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வானார்.

குறிப்பாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அயர்லாந்து டி20 தொடரில் தேர்வான அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் கடைசியாக ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் தேர்வாகியும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கடந்த வருடம் வரை இந்திய அணியை தொட முடியாத அவர் தற்போது அதை தொட்டு விட்டதால் அடுத்த வருடம் நிச்சயமாக அறிமுக கனவு தொப்பியை பெற்று இந்தியாவுக்காக விளையாடுவார் என்று நம்பலாம்.

- Advertisement -

4. அபிமன்யு ஈஸ்வரன்: உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் 76 போட்டிகளில் 5278 ரன்களை 43.61 என்ற நல்ல சராசரியில் எடுத்து வரும் இவர் கடந்த வருடம் இங்கிலாந்து சுற்று பயணத்திற்கான இந்திய அணியில் தேர்வான போதிலும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறவில்லை.

இருப்பினும் தொடர்ந்து போராடி வரும் அவர் தற்போது வங்கதேச மண்ணில் நடைபெற்று வரும் இந்தியா ஏ அணியின் கேப்டனாக அசத்தி வருகிறார். அந்த வகையில் இந்திய அணியை நெருங்கி விட்ட அவர் அடுத்த வருடம் சில சீனியர் வீரர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பப்படுவதால் நிச்சயம் இந்தியாவுக்காக அறிமுகமாவார் என்று நம்பலாம்.

- Advertisement -

3. கேஎஸ் பரத்: 82 போட்டிகளில் 4425 ரன்களையும் 282 கேட்ச்களையும் பிடித்து நல்ல விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் இவரும் கடந்த வருடம் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் தேர்வுவாகியும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறவில்லை.

இருப்பினும் மூத்த வீரர் ரித்திமான் சஹாவின் கதை முடிந்ததாக கருதப்படும் நிலையில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட் உள்ளார். அதனால் பேக் அப் விக்கெட் கீப்பராக உருவாகியுள்ள இவர் ரிஷப் பண்ட் ஓய்வெடுக்கும் அல்லது காயமடையும் போட்டிகளில் நிச்சயமாக அடுத்த வருடம் அறிமுகமாக களமிறங்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

2. யசஸ்வி ஜெய்ஸ்வால்: 20 வயதானாலும் முதல் தர கிரிக்கெட்டில் 1015 ரன்களை 84.58 என்ற சராசரியிலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 1511 ரன்களை 53.96 என்ற சராசரியிலும் எடுத்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இவர் அதிரடியான இடது கை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

அந்த நிலையில் ரோஹித் – ராகுல் ஜோடிக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டில் புதிய ஓப்பனிங் ஜோடியை உருவாக்க முடிவெடுத்துள்ள இந்திய அணி நிர்வாகம் நிச்சயமாக இவருக்கு முதல் வீரராக வரும் காலங்களில் வாய்ப்பு கொடுக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

1. சர்பிராஸ் கான்: கடந்த சில வருடங்களாகவே ரஞ்சி கோப்பையில் வெறிகொண்ட வேங்கையாக 2928 ரன்களை 81.33 என்ற அபாரமான சராசரியில் எடுத்து வரும் இவர் முதல் தர கிரிக்கெட்டில் ஏற்கனவே ஜாம்பவான் டான் பிராட்மேனை முந்தி குறிப்பிட்ட சில இன்னிங்ஸ்களுக்குப் பின் அதிக சராசரியை கொண்ட வீரராக சாதனை படைத்துள்ளார்.

அதே சமயம் இந்திய டெஸ்ட் அணியில் ஏற்கனவே ரகானே ஓரம் கட்டப்பட்ட நிலையில் புஜாராவும் கழற்றி விடப்படும் நிலையில் உள்ளார். அதனால் விரைவில் இவருக்கு தேர்வுக்குழு வாய்ப்பு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement