கிரிக்கெட்டை போலவே நடனத்திலும் அசத்தும் திறமை பெற்றுள்ள 5 டான்ஸர் கிரிக்கெட் வீரர்கள்

Bravo
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக பள்ளி அளவிலேயே கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வீரர்கள் தேசிய அணியில் இடம் பெறுவதற்காக கடினமான பயிற்சிகளை எடுத்து சிறப்பாகச் செயல்படுவதற்கான யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். அந்த வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் பேட்டிங், பவுலிங் அல்லது இரண்டையும் சேர்த்து செய்யும் ஆல்-ரவுண்டர் என்ற 3 வகையான பிரிவில் ஏதேனும் ஒன்றில் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மற்றொரு துறையைச் சேர்ந்த திறமை ஒளிந்திருப்பது இயற்கையான ஒன்றாகும்.

அந்த வகையில் சிலர் நல்ல கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் அவ்வப்போது தங்களுக்குள் இருக்கும் நடனத் திறமையை வெளிப்படுத்துவார்கள். பொதுவாகவே நடனம் என்பது ஒரு கலை என்பதை தாண்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு செயலாக கூட பார்க்கப்படும் நிலையில் எப்போதும் அழுத்தத்தில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் தங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது நடனமாடுவது வழக்கமாகும்.

- Advertisement -

ஆனாலும் எம்எஸ் தோனி போன்ற அமைதியுடன் கட்டுக்கோப்புடன் இருக்க நினைக்கும் வீரர்கள் நடனமாடுவதை பார்ப்பது அரிதாகும். அந்த வகையில் கிரிக்கெட்டில் நல்ல திறமையை பெற்றுள்ளதை போலவே நடனத்திலும் நல்ல திறமை பெற்று ரசிகர்களை கவர்ந்த 5 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. ஸ்ரீசாந்த்: 2007 டி20 உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றிய இவர் 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும் போது ஆக்ரோஷத்துடன் கொண்டாடக்கூடிய இவர் ஒருமுறை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தொகுத்து வழங்கிய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரபல பாடலுக்கு ஷாருக்கானுக்கு போட்டியாக சிறப்பாக நடனமாடியது பாராட்டுகளைப் பெற்றது. மேலும் ஓய்வுக்குப் பின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள இவருடைய நடன திறமை அவருடைய படங்களில் பார்க்க முடிந்தது.

- Advertisement -

4. ஹர்டிக் பாண்டியா: ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கருதப்படும் இவர் தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக நிறைய போட்டிகளுக்கு பின் சக வீரர்களுடன் இணைந்து நடனமாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தத் தருணங்களில் அவருக்குள் இருக்கும் டான்ஸர் வெளிப்படும் நிலையில் தன்னுடைய சகோதரரான க்ருனால் பாண்டியாவின் திருமணத்தில் போட்ட நடனம் சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் கூட விராட் கோலியுடன் இணைந்து அவர் போட்ட ஒரு நடனம் ரசிகர்களை கவர்ந்தது.

- Advertisement -

3. விராட் கோலி: பொதுவாகவே ஒரு விக்கெட் விழுந்தால் கூட அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்தாமல் கொண்டாடித் தீர்க்கும் விராட் கோலி 24000+ ரன்களையும் 71 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அப்படி சிறப்பாக விளையாடுவதால் ஏற்படும் பணிச்சுமையை குறைப்பதற்கு அவ்வப்போது நடனமாடும் அவர் அதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிடுவது வழக்கமாகும்.

ஐபிஎல் தொடரின் போது ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து அவர் போட்ட குத்தாட்டங்கள் பெங்களூரு ரசிகர்கள் மனதில் என்றுமே நிற்கிறது. அதைவிட 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின் அந்த சமயத்தில் இருந்த “கங்ணம் ஸ்டைல்” பாடலை கோப்பைக்கு முன்பாக அவர் ஆடியது யாராலுமே மறக்க முடியாது.

- Advertisement -

2. கிறிஸ் கெயில்: தனது பேட்டிங்கால் ரசிகர்களை மகிழ்விப்பது போலவே களத்தில் ஜாலியான குறும்பு வேலைகளில் ஈடுபட்டு அனைவரையும் மகிழ்விக்க கூடிய இந்த ஜாம்பவான் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது விராட் கோலியுடன் இணைந்து சிறப்பாக நடனமாடினார். அதுபோக சில போட்டிகளில் களத்தில் விக்கெட் எடுத்ததும் பிரபல கங்னம் ஸ்டைல் நடனமாடியதையும் ரசிகர்களால் மறக்க முடியாது.

1. ட்வயன் ப்ராவோ: சில மனிதர்கள் தாங்களே நினைத்தாலும் இசையை கேட்கும்போது தங்களது கை கால்களை கட்டுப்படுத்த முடியாமல் நடனமாடி விடுவார்கள். அதே போலவே கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கும் போதெல்லாம் தாமே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தம் மற்றும் சதையில் நடன திறமையை கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த இவர் ஒவ்வொரு விக்கெட்டுக்கு பின்பும் விதவிதமாக நடனமாடுவதில் உலக அளவில் புகழ் பெற்றவர்.

டி20 கிரிக்கெட்டில் 600 மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ள இவர் கிரிக்கெட் வீரரிகளிடையே மிகச் சிறந்த டான்ஸர் என்றால் மிகையாகாது. அத்துடன் மிகச் சிறந்த பாடகரான இவர் அவ்வப்போது தனது பாடலுக்கு இசையமைத்து நடனமாடும் ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement