சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடிய 5 வீரர்களின் பட்டியல்

Tim-David
- Advertisement -

ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. உலக கிரிக்கெட்டின் டி20 சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, உலகின் நம்பர் ஒன் டி20 அணியான இந்தியா உட்பட உலகின் டாப் 10 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும் என விரும்பும் கிரிக்கெட் வீரர்கள் சாதாரண தொடர்களில் விளையாடுவதை விட இது போன்ற ஐசிசி தொடர்களில் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்கள்.

இருப்பினும் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது என்ற நிலைமையில் குறைந்தபட்சம் சாதாரண போட்டியிலாவது விளையாடி விடமாட்டோமா என்ற எண்ணம் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் இருக்கும். அதில் ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றொரு கட்டத்திற்குப் பின் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டை விடுவதற்கு மனமில்லாமல் வேறு நாட்டுக்கு குடிபெயர்ந்து அங்கு விளையாட முயற்சிப்பார்கள்.

- Advertisement -

முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்பது போல் அந்த முயற்சியிலும் மற்றொரு நாட்டுக்காக வெற்றிகரமாக சில வீரர்கள் விளையாடுவார்கள். அந்த வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்கு விளையாடிய வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. மைக்கேல் ரிப்பன்: நெதர்லாந்தைச் சேர்ந்த இவர் தனது தாய் நாட்டுக்காக கடந்த 2013ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனாலும் 18 போட்டிகளில் விளையாடிய பின்பு நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.

- Advertisement -

இருப்பினும் உடனடியாக வாய்ப்பை பெறாத அவர் ஒரு வழியாக கடந்த ஜூலை மாதம் தான் நியூசிலாந்துக்காக மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி தற்போது விளையாடி வருகிறார்.

4. வன் டெர் மெர்வி: தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இவர் அந்நாட்டிற்காக கடந்த 2009இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடந்த போட்டியில் அறிமுகமானாலும் நீண்டகாலம் விளையாடாமல் 13 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

- Advertisement -

அதன்பின் நெதர்லாந்துக்கு குடி பெயர்ந்த இவருக்கு அந்நாட்டு வாரியம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் இதுவரை 33 போட்டிகளில் 403 ரன்களையும் 40 விக்கெட்டுகளையும் எடுத்து வெற்றிகரமாக விளையாடி வருகிறார். தற்போது 37 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையிலும் அந்த அணிக்காக விளையாட உள்ளார்.

3. டேவிட் வீஸ்: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவரும் கடந்த 2013இல் தாய் நாட்டுக்காக அறிமுகமாகி 20 போட்டிகளில் விளையாடி 92 ரன்களையும் 24 விக்கெட்களையும் எடுத்தார். அதன்பின் அங்கு பெரிய அளவில் வாய்ப்பை பெறாத அவர் 2021இல் நமீபியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டிற்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த அணிக்காக கடந்த உலக கோப்பையில் விளையாடிய அவர் தற்போது மீண்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட காத்திருக்கிறார். மேலும் நமீபியா அணிக்காக இதுவரை 16 போட்டிகளில் 295 ரன்களையும் 14 விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளார்.

2. டிர்க் நானீஸ்: இவரை பெரும்பாலான ரசிகர்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று நினைப்பார்கள். அது உண்மை தான். ஆனால் மெல்போர்னில் பிறந்த இவர் நெதர்லாந்துக்கு குடி பெயர்ந்து வளர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு அந்நாட்டிற்காக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இருப்பினும் நெதர்லாந்துக்காக வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் அடுத்த வருடம் தாய்நாடான ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி 15 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த சமயத்தில் ஐபிஎல் தொடரிலும் விளையாடிய இவர் ஆத்திரேலியாவுக்காக கடைசியாக 2010ல் விளையாடியிருந்தார்.

1. டிம் டேவிட்: சிங்கப்பூரில் பிறந்த அந்நாட்டுக்காக 14 போட்டிகளில் 558 ரன்களை 158.52 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த இவர் அங்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டுக்காக விளையாட முயற்சித்து வந்தார். இருப்பினும் எளிதாக வாய்ப்பை பெறாத அவர் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் அதிரடியான பேட்டிங் தேவையான நேரத்தில் பவுலிங் என சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு அனைவரையும் கவர்ந்தார்.

அதனால் ஒருவழியாக சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார்.

Advertisement